போராட்டத்தால் ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'; தொடக்க பள்ளிகளில் வகுப்புகள் முடக்கம்
போராட்டத்தால் ஆசிரியர்கள் 'ஆப்சென்ட்'; தொடக்க பள்ளிகளில் வகுப்புகள் முடக்கம்
UPDATED : ஜன 10, 2026 09:33 AM
ADDED : ஜன 10, 2026 09:35 AM
மதுரை:
தமிழகத்தில் ' சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி 10,000ம் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலான பள்ளிகளில் மூன்றாம் பருவ வகுப்புகள் முடங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தொடக்க கல்வியில் இரண்டாயிரத்து ஒன்பதுக்கு பின் நியமிக்கப்பட்ட இருபது ஆயிரம் ஆசிரியர்களுக்கு ரூபாய் பல ஆயிரம் சம்பள முரண்பாடு உள்ளது. இதை சரிசெய்ய வலியுறுத்தி பதினாறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
டிச., 26 முதல் தொடர் போராட்டங்களை அறிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் முற்றுகை, மனித சங்கிலி, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தினம் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்கின்றனர்.
இவர்களை தங்க வைக்க இடம் கிடைக்காததால் வாகனங்களில் அடைத்து சென்னை ரோடுகளை சுற்றிவந்து மாலையில் விடுவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தேவையாக உள்ளது. மதியம் ஆயிரம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்வது என போலீசாரின் பாடு திண்டாட்டமாகி வருகிறது.
அரையாண்டு தேர்வு முடிந்து ஜன., 5 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்லாமல், அந்தந்த மாவட்ட சி.இ.ஓ, அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்களில் நான்கு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் பணிக்கு செல்லாதவர்களுக்கு சம்பளம் பிடித்தம் (நோ ஒர்க்; நோ பே) செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் நேற்று சென்னையில் காந்தி இர்வின் பாலத்திலும், பிற மாவட்டங்களில் சி.இ.ஓ, அலுவலகங்களிலும் பதினொன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர் . பெரும்பாலான பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.,) பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பதினான்கு நாட்களாக போராட்டங்கள் நடக்கின்றன. மாணவர்கள் பாதிக்க கூடாது என்பதற்காக அரையாண்டு விடுமுறையை தியாகம் செய்து போராட்டத்தை துவக்கினோம். பள்ளி திறக்கும் வரையும் எங்களை அழைத்து பேசவில்லை.
தற்போது பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தான் இதற்கு காரணம். போராட்டத்தில் ஈடுபடும் பெண் ஆசிரியர்களை போலீசார் மனிதாபிமானமின்றி நடத்துகின்றனர். ஆசிரியர்களை குண்டுக்கட்டாக துாக்கி காயப்படுத்துகின்றனர். அறவழியில் போராடும் ஆசிரியர் சமூகத்தை அறம்மீறி இவ்வாறு நடத்துவது அரசுக்கு அழகல்ல. அதிகாரிகள் அழைத்து பேசி கோரிக்கை நிறைவேறும் வரை இன்னும் போராட்டம் வீரியமாக நடக்கும், என்றார்.

