அரசு பள்ளிகளில் ஈகோவால் ஆசிரியர்கள் மோதல்: மாணவர்களின் கல்வி திறன் பாதிப்பு
அரசு பள்ளிகளில் ஈகோவால் ஆசிரியர்கள் மோதல்: மாணவர்களின் கல்வி திறன் பாதிப்பு
UPDATED : மார் 19, 2025 12:00 AM
ADDED : மார் 19, 2025 09:22 AM
மானாமதுரை:
மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சிலர் கடந்த சில வருடங்களாக தங்களுக்குள் ஈகோ மற்றும் ஜாதி பிரச்னையில் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.
இவர்கள் தங்களது ஜாதியை சேர்ந்த மாணவர்களை கொம்பு சீவி விட்டு மற்ற ஜாதி மாணவர்களோடு அடிக்கடி மோதலிலும் ஈடுபட வைக்கின்றனர். சிலர் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்களை பற்றி பள்ளி வகுப்பறை, கழிப்பறை மற்றும் பல்வேறு இடங்களில் மோசமான வகையில் எழுத சொல்லி கொடுக்கின்றனர்.
மேலும் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் டூவீலர்கள், கார் போன்றவற்றை சேதப்படுத்துவது மற்றும் ஆசிரியர்களின் குடும்ப பிரச்னைகளை பற்றி வகுப்பறைகளில் பேசுவது போன்ற மோசமான, ஒழுக்ககேடான செயல்களிலும் சில மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு ஆயுதங்கள், போதை பொருட்களை பள்ளி வளாகத்துக்குள் கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 1500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 200க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர்.
கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது இதில் பாதியளவு மாணவர்களே படித்து வருகின்றனர்.
கீழப்பிடாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற ஒருவர் ஜாதி ரீதியில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வருவதாக கிராம மக்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதேபோன்று மானாமதுரை தாலுகாவில் பல பள்ளிகளில் நடைபெற்று வரும் பிரச்னைகளை தொடர்ந்து தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெற்றோர்கள் கூறியதாவது:
மானாமதுரையில் செயல்படும் பள்ளிகளில் சில ஆசிரியர்களே மாணவர்களை தூண்டி விட்டு மோதலில் ஈடுபட வைக்கின்றனர்.
அவர்கள் ஜாதி ரீதியில் மாணவர்களை துாண்டி விடுவதால் மிகப் பெரிய பிரச்னையாக மாறி விடுகிறது. எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஈகோ மற்றும் ஜாதி ரீதியில் செயல்படும் ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.