ஆசிரியர்கள் சமூக மாற்றத்தின் காரணியாக செயல்பட வேண்டும்'
ஆசிரியர்கள் சமூக மாற்றத்தின் காரணியாக செயல்பட வேண்டும்'
UPDATED : மே 29, 2026 06:35 PM
ADDED : மே 29, 2026 06:36 PM
திருப்பூர்:
“ஆசிரியர்கள், சமூக மாற்றத்தின் காரணியாக செயல்பட வேண்டும்” என எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார் பேசினார். திருப்பூர், வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளி தாளாளர் விட்டல் ராஜன் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், பள்ளி நிர்வாகிகள் ஜெயந்திமாலா, காயத்ரி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும், பாரதிதாசன் பல்கலை ஆட்சிப் பேரவை உறுப்பினருமான ஆதலையூர் சூரியகுமார் பங்கேற்று பேசியதாவது:
சமூகத்தின் அறிவு சார்ந்த மாற்றத்திற்கு, ஆசிரியர்கள் காரணமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தான் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். அந்த பெரும் பொறுப்பை அவர்களுக்குள் புகுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.
இன்றைய மாணவர்கள் தான், தேசத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறுகிறார்கள். அப்படி மாறும் போது, எது சரி? எது தவறு? என அறிவு சார்ந்து சிந்திக்க வேண்டும்; அதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். தேசத்தின் பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்ளும் அறிவு ஆகியவற்றை மாணவர்களிடம் மேம்படுத்த வேண்டும்.
தேசத்தின் எதிர்காலம் மற்றும் அரசியல் சக்தியை தீர்மானிப்பதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்குண்டு. ஆசிரியர்கள் தான் மாணவர்கள் மூலம் சமூக மாற்றத்தின் காரணியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
