ஆசிரியர்களுக்கு வேண்டும் பணி பாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி
ஆசிரியர்களுக்கு வேண்டும் பணி பாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி
UPDATED : நவ 22, 2024 12:00 AM
ADDED : நவ 22, 2024 04:35 PM
மதுரை:
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியை ரமணி பள்ளி வளாகத்திற்குள் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக அரசு பள்ளிகளில் போதிய பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக அரசு பள்ளிகளிலும் அடிப்படை பணியாளர்கள் (வாட்ச் மேன், துாய்மை பணியாளர், தோட்டக் காவலாளி, அலுவலக உதவியாளர்) 15 ஆண்டுகளுக்கும் மேலாக நியமிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
அதேநேரம் அரசின் மறைமுக உத்தரவால், ஓய்வு பெற்றோரின் ஆயிரக்கணக்கான அடிப்படை பணியாளர்களின் பணியிடங்கள் அரசிடம் சரண்டர் செய்யப்பட்டு விட்டதாக புகார் எழுந்தள்ளன. குறிப்பாக பள்ளிகளில் சுற்றுச்சுவர் வசதியும், வாட்ச் மேன்கள் நியமிக்கப்பட்டால் பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் மாநில தலைவர் அன்பரசன், பொது செயலாளர் மாரிமுத்து கூறுகையில் அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றனர்.
தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன், இன்றைய ஆசிரியர் பணி கத்தி மேல் நடப்பது போன்றுள்ளது. ஆசிரியர்களை கொண்டாட வேண்டிய சமூகம் தாக்குதலில் ஈடுபடுவது வேதனையானது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து முன்னேற்ற பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ், பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர், மாணவர் அல்லாத பிறர் அனுமதிக்கப்படுவதால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பெற்றோர் தவிர பிறரை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், பணியாற்றும் இடத்தில் ஆசிரியர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யாவிட்டால் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றார்.
@block@@@block@@