சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
UPDATED : டிச 27, 2025 10:14 AM
ADDED : டிச 27, 2025 10:15 AM
சென்னை:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சம வேலைக்கு சம ஊதியம்என்று வாய்கிழிய வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே!ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி:
சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது! உரிமை கோரி போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு இன்று வரை விடியல் கிடைக்கவில்லை.
இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகும் கூட இன்று வரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை; ஊதிய முரண்பாடும் களையப்படவில்லை. மாறாக, அவர்களை மீண்டும், மீண்டும் ஏமாற்றுவதன் மூலம் திமுக அரசின் துரோகப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி கூறியுள்ளார்.

