UPDATED : ஏப் 29, 2025 12:00 AM
ADDED : ஏப் 29, 2025 09:52 AM
 சிக்கமகளூரு: 
தரமான கல்வி இல்லாதது, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, பழைய கட்டடத்தில் இயங்குவது போன்ற காரணங்களால், அரசு பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே பல பள்ளிகள் மூடப்பட்டன. இது போன்று மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை, ஆசிரியைகள் காப்பாற்றினர்.
சிக்கமகளூரு மாவட்டத்தின் மசகொண்டனஹள்ளி கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் ஏழாம் வகுப்பு வரை செயல்படுகிறது. கன்னடம், ஆங்கிலம் வழியில் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. கட்டடமும் சீர் குலைந்திருந்தது.
போர்வெல்
மாணவர்கள் எண்ணிக்கையும், படிப்படியாக குறைந்தது. எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், அப்பள்ளிகளை மூடுவதற்கு கல்வித்துறை திட்டமிட்டது.
இங்குள்ள மாணவர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றவும் முடிவு செய்தது. பெற்றோரும், இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகளும் வருத்தம் அடைந்தனர். பள்ளியை மூட விடாமல் தடுக்க உறுதி பூண்டனர்.
கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றும் ஹீனா தபஸ்சும், ரஜியா சுல்தானாவும், பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டினர்.
முதற் கட்டமாக குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தனர். தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம், கிராமத்தினரிடம் கிடைத்த நன்கொடையை பயன்படுத்தி, பள்ளி வளாகத்தில் போர்வெல் தோண்டினர். இரண்டு முறை தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை.
ஆசிரியைகள் மனம் தளரவில்லை. மீண்டும் பணம் திரட்டி போர்வெல் தோண்டினர். தண்ணீர் வந்ததால் பள்ளியின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது. அதன்பின் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டடத்தை சீரமைத்தனர். விளையாட்டு மைதானம் அமைத்தனர். இவர்களின் முயற்சியை கண்டு, பள்ளி மேம்பாடு மற்றும் மேற்பார்வை கமிட்டி, ஆசிரியைகளுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்க துவங்கியது.
அனுமதி
பள்ளியில் மாணவியருக்கு தனி கழிப்பறை கட்ட, மாநில அரசிடம் அனுமதி பெறப்பட்டது. பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதற்கு முன் பள்ளியில், 40 முதல் 50 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
இப்போது 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மூடும் நிலையில் இருந்த பள்ளியை, காப்பாற்றி மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற, இரண்டு ஆசிரியைகள் காரணமாக உள்ளனர்.
இன்றைய காலத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பெயர் அளவில் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் நலனில் அக்கறை காட்டுவது அபூர்வம்.
இவர்களுக்கு இடையே ஹீனா தபஸ்சும், ரஜியா சுல்தானாவும் முன் மாதிரியாக உள்ளனர்.
இவர்கள் முயற்சி எடுத்திராவிட்டால், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி, பள்ளி மூடப்பட்டிருக்கும். மாணவர்கள் தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்.
இப்போது கிராமத்து பள்ளியிலேயே நிம்மதியுடன் படிக்கின்றனர். பாடம் நடத்துவது மட்டுமே, தங்களின் கடமை அல்ல. மாணவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்பதை, இவர்கள் உணர்த்தி உள்ளனர்.
ரூ.53 லட்சம்
பள்ளி தலைமை ஆசிரியை சவிதா கூறியதாவது:
சமீபத்தில், விவேகா திட்டத்தின் கீழ், 53 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. பள்ளியில் மேலும் சில வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. கொடிக்கம்பம் இல்லை. உடற் பயிற்சி ஆசிரியர்கள் இல்லை. சமையல் அறை கட்ட வேண்டும்.
மாணவர்கள் மதிய உணவு சாப்பிட, அறை வசதி இல்லை. மழைக்காலத்தில் அவர்கள் திறந்த வெளியில் சாப்பிடுவது வருத்தம் அளிக்கிறது. அதற்கு தனி அறை கட்ட வேண்டும். காம்பவுண்ட் சுவர் கட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

