நான் முதல்வன் பயிற்சி திட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் ஏமாற்றம்
நான் முதல்வன் பயிற்சி திட்டத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள் ஏமாற்றம்
UPDATED : ஆக 01, 2025 12:00 AM
ADDED : ஆக 01, 2025 08:52 AM
கோவை:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தகுதித் தேர்வு, கோவையில் நடைபெற்றது. இத்தேர்வுப் பணிகளில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
யு.பி.எஸ்.சி.,தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, கட்டணமில்லா பயிற்சியுடன், உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 2026-ம் ஆண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களைத் தேர்வு செய்ய, அவர்களுக்கான தகுதித் தேர்வு, கோவை மாநகரில் 6 மையங்களில் நடைபெற்றது; 1,506 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
தேர்வு பணிகளில் அறை கண்காணிப்பாளர்கள், ஸ்கிரைப் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என, ஒரு மையத்திற்குத் தலா 27 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக, ரூ.150 நிர்ணயிக்கப்பட்டது. தேர்வு முடிந்தும் இந்த ஊதியம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், தேர்வு கண்காணிப்புப் பணிக்கு ஊதியம் வழங்கியதாக, கையெழுத்து வாங்கிக்கொண்டனர். பணம் 'கூகுள் பே' வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதுவரை வரவில்லை. கடந்த ஆண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, தமிழ்த் திறனாய்வுத் தேர்வு கண்காணிப்புப் பணிக்கும், ஊதியம் வழங்கப்படவில்லை என்றனர்.