UPDATED : செப் 06, 2026 02:13 PM
ADDED : செப் 06, 2026 02:18 PM
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு இந்தாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி மட்டுமின்றி, மாணவர்களின் தனித்திறன், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை வளர்ப்பதில் சிறந்து விளங்கிய ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கல்விப் பயணம், சாதனைகள் மற்றும் கற்பித்தல் அனுபவங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டவை...
எளிய கற்பித்தல்
குமரவேலு, கணிதம் முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னிவாடி:
2013 முதல் கல்வித்துறையில் பணியாற்றுகிறேன். கணிதம் கடினம் என்ற எண்ணத்தை மாற்ற, ஜியோஜீப்ரா, ஏ.ஐ., டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மூலம் காட்சிப்படுத்தி கற்பிக்கிறேன். டி.என். ஸ்பார்க் திட்ட சிறப்பு ஆசிரியராகவும், மணற்கேணி, கல்வி தொலைக்காட்சி, யூடியூப் தளங்களிலும் பாடம் நடத்துகிறேன்.
மனப்பாடத்தை விட செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கணிதம் கற்றால் எளிதாகப் புரியும். கணிதக் கற்றலை எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றியதற்காக இந்த விருது கிடைத்துள்ளது. 'தினமலர்' லட்சிய ஆசிரியர் விருதும் பெற்றுள்ளேன்.
போட்டித் தேர்வுகள்
ராஜேஸ்வரி, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்:
சிறந்த கற்றல் சூழலை உருவாக்கி, கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் மாணவர்கள் சாதிக்க வழிகாட்டுகிறோம். ஜே.இ.இ., நீட், என்.எம்.எம்.எஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு உதவியதுடன், சி.எஸ்.ஆர். நிதி மூலம் குடிநீர் வசதி, விளையாட்டு உபகரணங்கள், புரொஜெக்டர்கள், ஸ்மார்ட் போர்டுகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பே இந்த விருதுக்கு காரணம்.
நுாறு சதவீதம்
ஷோபனா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, மங்கலம்:
கற்பிக்கும் பாடத்தில் நுாறு சதவீத தேர்ச்சியை உருவாக்குவதே நோக்கம். சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் முழு தேர்ச்சிக்குப் பயிற்சி அளித்துள்ளேன்.
பள்ளி உள்கட்டமைப்பு, மாணவர்களின் தனித்திறன், அறிவியல், கலைச் சிந்தனை, மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் குறைப்பு, சமூக விழிப்புணர்வு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். ஒழுக்கம் மற்றும் கல்வித்தரத்தை ஒருசேர உயர்த்துவதே ஆசிரியர் பணி. விருதுத் தொகையை பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவேன்.
வாழ்க்கைக் கல்வி
புஷ்பலதா, உதவி தலைமை ஆசிரியர் / என்.எஸ்.எஸ். அலுவலர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்:
நல்ல மதிப்பெண் மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் பொறுப்புள்ள குடிமகனாகவும் மாணவரை உருவாக்குவதே ஆசிரியரின் வெற்றி. கல்வியுடன் வாழ்க்கை, மனிதநேயம், சமூகப் பொறுப்பையும் கற்றுத்தர வேண்டும்.
என்.எஸ்.எஸ். மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் வாழ்க்கையை மாணவர்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்துகிறேன். ஒழுக்கமே கல்வியின் அடித்தளம்; ஆசிரியர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பதில்களை மட்டும் சொல்லாமல், சரியான கேள்விகளையும் முடிவுகளையும் எடுக்க வழிகாட்டுவதே ஆசிரியர் பணி. இந்த விருது கூடுதல் பொறுப்பு.
தன்னம்பிக்கை வழிகாட்டல்
ரவி, ஓவிய ஆசிரியர், வி.மு.செ.த.வி. மேல்நிலைப்பள்ளி, தாயம்பாளையம், ஊதியூர்:
ஓவியத்துடன் கைவினைக் கலைகளையும் கற்றுத்தந்து, மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கிறேன். அழிந்து வரும் பொம்மலாட்டக் கலையை பாதுகாக்க தோல்பாவை, மரப்பாவை, கையுறைப்பாவை உள்ளிட்டவற்றையும் கற்றுத்தருகிறேன்.
பொம்மலாட்ட நாடகங்கள் மூலம் பள்ளி இடைநிற்றலுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளேன். பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் அவசியம். மாணவரின் தனித்திறனை கண்டறிந்து, தன்னம்பிக்கையுடன் முன்னேற வழிகாட்டுவதில் தான் ஆசிரியரின் உண்மையான வெற்றி உள்ளது.
திறமை தான் பலம்
சின்னையா, பள்ளி முதல்வர், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.செட்டிபாளையம், திருப்பூர்:
31 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ளேன். தேசப்பற்று, தெய்வப்பற்று, ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றை கல்வியுடன் கற்றுத்தருகிறேன். மதிப்பெண் மட்டுமல்ல; நல்ல மனிதர்களை உருவாக்குவதே உண்மையான கல்வி.
மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து வெளிக்கொணர்வதுடன், தன்னம்பிக்கை, தைரியம், நேர்மை, பொறுப்புணர்வையும் வளர்க்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதே ஆசிரியரின் வெற்றி. இந்த விருது பள்ளிக் குடும்பத்துக்கான அங்கீகாரம்; மேலும் பொறுப்புடன் பணியாற்ற உத்வேகம் அளித்துள்ளது.
படைப்பே வெளிச்சம்
பாக்கியலட்சுமி, ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அவிநாசி:
17 ஆண்டுகளாக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களின் தனித்திறன், படைப்பாற்றலை வளர்க்க யோகா, பரதம், சிலம்பம், குங்பூ, ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகளை நடத்துகிறோம்.
ஸ்மார்ட் டிவி கற்பித்தல், புதிய சீருடை, அடையாள அட்டை உள்ளிட்ட மாற்றங்கள் பெற்றோர் நம்பிக்கையை அதிகரித்தன. 250 முதல் 300 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 350 ஆகவும், மூன்று ஆசிரியர்கள் இருந்த பள்ளி 12 ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாகவும் வளர்ந்துள்ளது.
பள்ளியே பிடிக்கும்
மோகன், பொறுப்பு தலைமை ஆசிரியர், மாநகராட்சி துவக்கப்பள்ளி, புதுராமகிருஷ்ணாபுரம்:
22 ஆண்டுகளாக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்கள் பள்ளியை விரும்பி வர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
விடுமுறை எடுக்காமல் வருபவர்களுக்கு பரிசு, சிறந்த சேமிப்பாளருக்கு விருது என ஊக்குவிப்பதால் வருகை அதிகரித்துள்ளது. முதல் நாளில் குழந்தைகளுக்குப் பரிசளித்து வரவேற்கிறோம்.
பெற்றோர் பங்களிப்புடன் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து, பின்தங்கிய மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் உதவுகிறோம். அனைத்து ஆசிரியர்களும் இணைந்து மாணவர் நலனுக்காக பணியாற்றுவதே மகிழ்ச்சி.
வீடு தேடி...
ஷியாம் சுந்தர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கருமஞ்சிறை, ஊத்துக்குளி ஒன்றியம்:
கல்வியுடன் விழாக்களும் மாணவர்களை பள்ளிக்கு ஈர்க்கும். புதிய மாணவர்களுக்கு மாலை, மேளதாளம், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் முயற்சி பெற்றோரை மகிழ்ச்சியடையச் செய்தது.
கிராமப்புற பள்ளி என்பதால், வீடு தேடி சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தேன். இதனால் 80 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அவசியம் என்பதை பெற்றோரிடம் எடுத்துரைத்து ஆர்வத்தை அதிகரித்துள்ளோம். போட்டி, விழாக்களில் பங்கேற்கும்போது ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனும் வெளிப்படும். பள்ளி வளர்ச்சிக்காக தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன்.
மாணவர் திறன் கண்டறிய கலாம் வழி
செந்தில்வடிவு, தலைமை ஆசிரியர், மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோ நகர்:
ஆசிரியப் பணி ஒரு தொழில் அல்ல; மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் கடமை. அப்துல்கலாம் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ஒவ்வொரு மாணவரின் தனித்திறனையும் கண்டறிந்து மேடையேற்றி ஊக்குவிக்கிறோம்.
கல்வி உற்சாகமாக கற்பிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளப்பட வேண்டும். நாளிதழ்கள் வாசித்தல் உள்ளிட்ட செயல்கள் மூலம் புதிய விஷயங்களை தேடி கற்கும் ஆர்வத்தை உருவாக்குகிறோம். தன்னம்பிக்கை, ஆளுமைத்திறன், தலைமைத்துவம், ஒழுக்கம் உள்ளிட்ட பண்புகளை வளர்க்கும் கல்வியே மாணவனை முழுமையாக்கும்.
தாயைப் போல் அரவணைக்கிறோம்
அமுதவல்லி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆண்டிபாளையம்:
பல குடும்பச் சூழல்களில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவர்களை, அன்புடனும் பொறுமையுடனும் தாயைப் போல அரவணைத்து கற்பிக்கும்போது நல்ல மாற்றத்தை காண முடியும். கல்வியுடன் பொறுப்பு, நேர மேலாண்மையையும் கற்றுத்தர வேண்டும்.
அன்றைய பாடத்தை அன்றே படிப்பதே ஸ்மார்ட் ஒர்க்; பாடங்களை சேர்த்து வைத்து கடினமாக உழைக்க வேண்டியதில்லை. அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவாற்றலும் தன்னம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. அவர்கள் அனைவரும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த விருதுக்கு எங்கள் பள்ளி மாணவர்களே காரணம்.
