போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தாராம் 27 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு; ஹெச்.எம்., மீது வழக்கு
போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தாராம் 27 ஆண்டுக்கு பின் கண்டுபிடிப்பு; ஹெச்.எம்., மீது வழக்கு
UPDATED : மார் 27, 2024 12:00 AM
ADDED : மார் 27, 2024 10:45 AM

ஏற்காடு:
ஏற்காடு, முளுவியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த ஜூனில் இருந்து தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் வெங்கடேசன். 1997 முதல், 27 ஆண்டுகளாக ஏற்காட்டில் செங்காடு, நல்லுார், குண்டூர் மலைக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தார்.இந்நிலையில் ஏற்காடு வட்டார கல்வி அலுவலர் ஷேக் தாவூத், அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன், 10ம் வகுப்பு முதல், பி.எட்., வரை படித்து முடித்ததற்கான கல்வி சான்றிதழ்களை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இதனால் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டதோடு, அவர் தலைமறைவானார்.இதுகுறித்து ேஷக் தாவூத் கூறுகையில், அனைத்து பள்ளி ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் உண்மைத்தன்மை அறிய, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பினோம். அதில் வெங்கடேசனின் சான்றிதழில் சந்தேகம் இருந்ததால், அவரது அசல் சான்றிதழை பெற்று சோதனை செய்ததில், அவர் கொடுத்து பணியில் சேர்ந்த அனைத்து சான்றிதழ்களும் போலி என தெரிந்தது என்றார்.