செமிகண்டக்டர் சிப்களை வாங்குவதற்காக டாடா குழுமத்துடன் டெஸ்லா ஒப்பந்தம்
செமிகண்டக்டர் சிப்களை வாங்குவதற்காக டாடா குழுமத்துடன் டெஸ்லா ஒப்பந்தம்
UPDATED : ஏப் 17, 2024 12:00 AM
ADDED : ஏப் 17, 2024 10:56 AM
புதுடில்லி:
செமிகண்டக்டர் சிப்'களை வாங்குவதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன், 'டெஸ்லா' நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் நுழைய நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் எனவும், பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகன தொழிற்சாலை அமைப்பது, ஸ்டார்லிங்க் அறிமுகப்படுத்துவது போன்ற முக்கிய முதலீடு முடிவுகளை, அவர் அப்போது அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா அதன் மின்சார மோட்டார், பேட்டரி, சார்ஜர் உள்ளிட்டவற்றை அதுவே தயாரிக்கிறது. நிறுவனத்தின் பிற உதிரிபாகங்கள், ஒப்பந்த தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு பின், சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் இருந்தும் உதிரிபாகங்களை நிறுவனம் பெறத் துவங்கியது.
மின்சார வாகனங்களில் உள்ள மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மின் வாகன வினியோக தொடரை இந்தியாவில் அமைக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, செமிகண்டக்டர் சிப்களை வாங்குவதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் டெஸ்லா நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகம், குஜராத் மற்றும் அசாமில் செமிகண்டக்டர் தயாரிப்பு வசதிகளை கொண்டுள்ளது. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் 1.16 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.