UPDATED : அக் 07, 2025 08:40 AM
ADDED : அக் 07, 2025 08:41 AM
பல்லாரி:
மதிப்பெண் பட்டியலில், தன் படத்துக்கு பதிலாக, சுவாமிஜியின் படம் இருப்பதை கண்டு மாணவர் அதிர்ச்சி அடைந்தார்.
கொப்பாலில் கவிசித்தேஸ்வரா கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரி, பல்லாரியின் விஜயநகர ஸ்ரீகிருஷண தேவராயா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதில் தேவராஜ் மூலிமனி என்ற மாணவர் படிக்கிறார்.
இவர் மதிப்பெண் கோரி, ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தார். சில நாட்களுக்கு பின், மதிப்பெண் சான்றிதழ் வந்தது.
அதை கண்ட மாணவர் அதிர்ச்சி அடைந்தார். மதிப்பெண் சான்றிதழில், மாணவரின் படத்திற்கு பதிலாக, கவி சித்தேஸ்வர சுவாமிகளின் படம் இருந்தது. இதுகுறித்து, அவர் கல்லுாரி நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து, விஜயநகர ஸ்ரீகிருஷ்ண தேவராயா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாணவரின் அனைத்து விபரங்களையும், மாணவரே ஆன்லைனில் அப்லோடு செய்திருந்தார். இதை நாங்கள் ஆய்வு செய்யவில்லை. பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து, மதிப்பெண் பட்டியல் எங்களுக்கு வரும். இதை அச்சிட்டுக் கொடுப்பது மட்டுமே எங்களின் வேலை.
மதிப்பெண் பட்டியலில், தவறுகள் இருந்தால், மாணவர் சரியான தகவல்களை ஆன்லைனில் அனுப்பினால், மதிப்பெண் பட்டியலை அனுப்புவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.