UPDATED : டிச 22, 2025 07:46 AM
ADDED : டிச 22, 2025 07:48 AM

தேனி:
தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது.
தேனியில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கியது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். இருவரும் விழாவில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் கைதிகள் வாசிக்க புத்தகங்களை தானமாக வழங்கினர். தினமலர் நாளிதழின் அரங்கு 'D5'ல் புத்தகங்களை கலெக்டர், எம்.பி., பார்வையிட்டனர்.
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகள் அடங்கிய புத்தக தொகுப்பை எம்.பி., தங்கதமிழ்செல்வன் வாசித்து, வாங்கிச் சென்றார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மொத்தம் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் நுால் விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு டோக்கன் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க ரூ.100 மதிப்பிலான டோக்கன்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. புத்தக திருவிழாவிற்கு அழைத்து வரும் நாளில் மாணவர்களுக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், டி.ஆர்.ஓ., ராஜகுமார், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா, கமிஷனர் பார்கவி, கலெக்டர் நேர்முக உதவியார் முகமது அலிஜின்னா, பி.ஆர்.ஓ., நல்லதம்பி, மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் ஆனந்தவேல், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

