UPDATED : ஏப் 09, 2025 12:00 AM
ADDED : ஏப் 09, 2025 09:15 AM
சென்னை:
தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
அதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
மத்திய அரசு மும்மொழி கொள்கை, புதிய கல்வி கொள்கையை பின்பற்றினால் தான் நிதி தர முடியும் என்று கூறியபோது, பணத்துக்காக கொள்கைகளை மீற முடியாது என்றவர் முதல்வர் ஸ்டாலின்.
நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல; மொழியை திணிப்பதையே எதிர்க்கிறோம். சிந்திப்பதற்கு தாய்மொழியும், தொடர்பு கொள்ள ஆங்கிலமும் அவசியம். அதனால் தான், இரு மொழி கொள்கையை பின்பற்றுகிறோம்.
கல்வி தொடர்பாக மத்திய அரசு வரையறுத்துள்ள, 20 குறிக்கோள்களில், அனைத்தையும் நிறைவேற்றிய மாநிலமாக கேரளாவும், 19ஐ நிறைவேற்றிய மாநிலமாக தமிழகமும் உள்ளன. அதை பாராட்ட மனமின்றி, மத்திய அரசு நிதி தர மறுப்பது கொடுமை.
அனைத்து தொகுதிகளையும் அமைச்சரால் கண்காணிக்க முடியாது. அந்தந்த பகுதிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், அப்பகுதியில் உள்ள பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். அங்கு நடக்கும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். தரமில்லாத பணி நடந்தால், புகார் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

