UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 09:51 AM
திருமங்கலம்:
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருமங்கலம் கோர்ட் வளாகம், தாலுகா அலுவலகம், சிறை வளாகம், பஸ் ஸ்டாண்ட், அறிவு சார் மையம் பகுதிகளில் கலெக்டர் சங்கீதா நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தையும் ஆய்வு செய்தார். அங்கு 11ம் வகுப்பு படிக்கும் கள்ளிக்குடி பகுதி மாணவி, எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் கல்வியை தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.
திருமங்கலம் மகளிர் போலீசாரை அழைத்த கலெக்டர் சங்கீதா, இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் பேசி நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டார்.
மாணவியின் பெற்றோரை அழைத்த போலீசார் அவர்களிடம் மாணவியின் கோரிக்கை குறித்து தெரிவித்தனர். கிராமப் பகுதியில் தொடர்ந்து பெண் கேட்டு வருவதாகவும், அதனால் அது குறித்து பேசியதாகவும், 18 வயது முடிந்த பின்னரே திருமணம் செய்வோம் எனவும் பெற்றோர் உறுதியளித்தனர். அதனை எழுதி வாங்கிய போலீசார், கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர்.