புற்று நோய்க்கு ரஷ்யாவில் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு
புற்று நோய்க்கு ரஷ்யாவில் தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக அளிக்க முடிவு
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:20 AM
மாஸ்கோ:
புற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ள ரஷ்யா, அடுத்த ஆண்டு முதல் இது, நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் என்று தெரிவித்துள்ளது.
மருத்துவ உலகில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டாலும், புற்று நோய்க்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது. கீமோதெரபி சிகிச்சை மட்டுமே இதற்கு தீர்வாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
சில தனியார் மருந்து நிறுவனங்கள், மெலனோமா எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பாதி கட்டத்தை தாண்டியுள்ளன. இந்த சூழலில், புற்று நோய் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் உள்ளனர். விரைவில் அது நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புற்று நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சகம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளது.
இது குறித்து, ரஷ்யா சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் கூறுகையில், புற்று நோய்க்கு எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசியை தயாரித்து உள்ளோம். இது, அடுத்த ஆண்டு முதல் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு நோயைத் தடுக்க வழங்கப்படுவதில்லை. மாறாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இந்த தடுப்பூசி, ஆர்.என்.ஏ., தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்தும், ஒவ்வொரு நோயாளியின் புற்று நோயின் தன்மையை அடிப்படையாக கொண்டும் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இது எந்த வகை புற்றுநோயை எதிர்கொள்கிறது; அதன் செயல்திறன் எவ்வளவு என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.