பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்!
பள்ளி மாணவர்களுக்கு வினாத்தாள் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்!
UPDATED : ஜூலை 15, 2025 12:00 AM
ADDED : ஜூலை 15, 2025 08:38 AM

மதுரை:
தமிழகத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது. அதை அரசே ஏற்க வேண்டும். இதன் மூலம் மாவட்டம் வாரியாக நடக்கும் ரூ.பல லட்சம் கமிஷன் முறைகேடு முடிவுக்கு வரும் என பெற்றோர், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பொதுத் தேர்வுகள் தவிர, ஆண்டு, இடைப்பருவ, காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்காக வினாத்தாள் கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி 6 -8 க்கு தலா ரூ.70, ஒன்பது, 10ம் வகுப்புக்கு தலா ரூ.100, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களிடம் தலா ரூ.120 என மாவட்டத்திற்கு ஏற்ப இது வசூல் செய்யப்படுகிறது.
பெரும்பாலும் மாவட்டம் வாரியாக வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஒரு தனியார் அச்சகம் ஒதுக்கீடு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி அந்த அச்சகத்தில் வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாநிலம் அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் முறை நடைமுறையில் இருந்தால், இதுபோன்ற வீண் செலவு பெருமளவில் தவிர்க்கப்படும். ஆனால் மாவட்டம் வாரியாக வினாத்தாள் தயாரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
பின்னணி என்ன
இந்த கட்டணம் அடிப்படையில், அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பெரிய மாவட்டங்களில் ரூ. 2 கோடி வரையும், எண்ணிக்கை குறைவாக உள்ள சிறிய மாவட்டங்களில் ரூ.1 கோடி வரையும் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசியல், அதிகாரிகள் வகையில் 40 சதவீதம் வரை கமிஷன் போய்விடுகிறது என ஆசிரியர் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ. பல லட்சம் முறைகேடு நடக்கிறது. நேர்மையான அதிகாரிகள் பணியாற்றும் மாவட்டங்களில் யாரும் 'கமிஷன்' பெறுவதில்லை.
இதுபோன்ற கமிஷனுக்காகவே மாவட்டம் வாரியாக வினாத்தாள் தயாரிப்பதில் ஆர்வம் செலுத்துகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் ரூ.50 தவிர வேறு எவ்வித கட்டணமும் மாணவர்களிடமிருந்து வசூலிக்க கூடாது என கல்வித்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் மிகப் பெரிய அளவில் வசூலிக்கப்படுகிறது.
தொடக்க பள்ளிகளில் இதுபோன்ற வசூல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உயர், மேல்நிலைகளில் இது தொடர்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:
மாணவர்களிடம் வசூலிக்கப்படும் வினாத்தாள் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். கல்வித்துறைக்கு ரூ.40 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ. பல கோடியில் நலத்திட்டங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவ்வகையில் வினாத்தாள் கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும். இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது என்றார்.