சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவக்கம் தனியார் பள்ளி கட்டண மசோதா தாக்கலாகிறது
சட்டசபை மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவக்கம் தனியார் பள்ளி கட்டண மசோதா தாக்கலாகிறது
UPDATED : ஆக 03, 2025 12:00 AM
ADDED : ஆக 03, 2025 09:20 AM

புதுடில்லி:
தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை ஒழுங்கு படுத்தும் மசோதா, சட்டசபையில் நாளை துவங்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லி சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. வரும், 8ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், தேவைக்கு ஏற்ப நீட்டிக்கப்படும் என சபாநாகயர் விஜேந்தர் குப்தா கூறியுள்ளார்.
இந்நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு, ஏப்ரல் 29ம் தேதி நடந்த கூட்டத்தில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, சட்டசபையில் நாளை துவங்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
இந்த சட்டத்தின்படி தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகும், அரசு விதிமுறையை மீறி, கூடுதல் கட்டணம் வசூலித்தால், இரண்டு லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்கவில்லை எனில், 20 நாட்களுக்குப் பிறகு இரட்டிப்பாகவும், 40 நாட்களுக்குப் பின், மூன்று மடங்காகவும் அபராதம் விதிக்கப்படும்.
ஒவ்வொரு 20 நாள் தாமதத்துக்கும் அபராதத் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். தொடர்ந்து விதிமுறையை மீறினால், பள்ளி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பதவிகள் பறிக்கப்படும்.
காகிதப் பயன்பாடு இல்லாத, முற்றிலும் டிஜிட்டல்மயமான முறையில் சட்டசபை செயல்படும். அதேபோல, சட்டசபை வளாகம் சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்குகிறது. டில்லி சட்டசபையை மற்ற மாநிலங்களுக்கு மாதிரி சட்டசபையாக உருவாக்கிஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குடிசைவாசிகளுக்கு வீடு! பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக வடமேற்கு டில்லி சுல்தான்புரியில், 2011ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளை நேற்று ஆய்வு செய்த பின், முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் கட்டப்பட்ட, 50,000 வீடுகளைக் கொண்ட பல அடுக்குமாடி குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான வீடுகள் யாருக்குமே ஒதுக்கப்படவில்லை.
முந்தைய ஆம் ஆத்மி அரசு, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த போதும் இந்தக் குடியிருப்புகளில் கவனம் செலுத்தவில்லை. இதனால் இந்த வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன.
இந்த வீடுகளில் சீரமைத்து, அனைத்து வசதிகளும் செய்து, இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குடிசைவாசிகளுக்கு இங்கு வீடுகள் ஒதுக்கப்படும். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சி செய்த போது, இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை ஏழைகளுக்கு வழங்கவில்லை.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், எந்தக் குடிசைப்பகுதிகளும் மாற்று வீடு வழங்காமல் அகற்றப்படாது. குடிசைவாசிகளின் உரிமையைப் பாதுகாக்க பா.ஜ., அரசு நீதிமன்றம் வரை செல்லவும் தயங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
வடமேற்கு டில்லி பா.ஜ., - எம்.பி., யோகேந்தர் சந்தோலியா, அமைச்சர் ஆஷிஷ் சூட் மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.
ஷாஹீத் சுக்தேவ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
தலைநகர் டில்லியில், சஞ்சய் முகாம் அல்லது 'நேரு முகாம்' போன்ற பெயர்களைக் கொண்ட குடிசைப் பகுதிகளை உருவாக்குவதை விட, குடிசைகளில் வசிப்போருக்கு வீடு வழங்கவே பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிசையில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்கும் முதல் அரசு, பா.ஜ., அரசுதான்.
சிந்திக்க வேண்டும் தரமான உயர்கல்விக்காக, ஷாஹீத் சுக்தேவ் கல்லூரியில், 500 புதிய இடங்கள் உருவாக்கப்படும். கடந்த, 20 ஆண்டுகளாக டில்லியில் ஒரு புதிய கல்லூரியைக் கூட முந்தைய அரசுகள் திறக்கவில்லை. மாணவ - மாணவியர் கல்வியைத் தாண்டி சிந்திக்க வேண்டும் .
பட்டப்படிப்பு படிப்பது மட்டுமே இலக்காக கொள்ளக்கூடாது. தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். ஒருவர் வாழ்வில், கல்லூரிக் காலம் தான் பொற்காலம். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, முதல்வர் ரேகா குப்தா, கல்லூரி முதல்வர் பூனம் வர்மா உள்ளிட்டோர், சுதந்திரப் போராட்ட தியாகி, ஷாஹீத் சுக்தேவ் தாப்பர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

