தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு புதுச்சேரியில் இன்று நடக்கிறது
UPDATED : ஏப் 22, 2024 12:00 AM
ADDED : ஏப் 22, 2024 08:15 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில்தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு நடக்க உள்ளதாக, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய பணியாளர் தேர்வாணையம், 2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றாக புதுச்சேரியை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அதற்கான தேர்வு இன்று நடக்கிறது.
அதன்படி, முத்தியால்பேட்டை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தேர்வு நடைபெறுகிறது. முதல் அமர்வு காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, இரண்டாம் அமர்வு, மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மூன்றாம் அமர்வு மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இந்த தேர்வை, 168 பேர் எழுதுகின்றனர்.
இதேபோல, லாஸ்பேட்டை, வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு நடக்கிறது. முதல் அமர்வு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரையும், இரண்டாம் அமர்வு மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரையும் நடக்கிறது. இத்தேர்வை, 170 பேர் எழுதுகின்றனர்.மொத்தம், 338 பேர், புதுச்சேரியை தேர்வு மையமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
தேர்வர்களின் வசதிக்காக, காலை மற்றும் மாலையில் புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களை, அரசு இயக்க ஏற்பாடுகள் செய்துள்ளது.
இரு தேர்வு மையங்களிலும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மொபைல், பேஜர், நிரல்படுத்தக்கூடிய சாதனம், ஸ்மார்ட் வாட்ச், பென் டிரைவ் , கேமரா, புளூ டூத் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை தேர்வின் போது, வைத்திருக்கவோ, பயன்படுத்தவோ கூடாது.
இதை மீறினால், எதிர்கால தேர்வுகளில் இருந்து தடை உட்பட, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வர்கள், விலை உயர்ந்த பொருட்களையும், தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.