பழங்குடியின குழந்தைகளின் துவக்கக்கல்வி கேள்விக்குறியானது!
பழங்குடியின குழந்தைகளின் துவக்கக்கல்வி கேள்விக்குறியானது!
UPDATED : டிச 23, 2025 07:03 AM
ADDED : டிச 23, 2025 07:12 AM

உடுமலை:
குழிப்பட்டி உள்ளிட்ட மலைக்கிராமங்களில், பள்ளிக்கட்டடங்கள் பராமரிக்கவும், புதுப்பிக்கவும் அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தால், அப்பகுதி குழந்தைகளின் துவக்கக்கல்வி கேள்விக்குறியாகியுள்ளது; திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 13க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
அங்கு வசிக்கும் மக்களின் குழந்தைகளின் துவக்கக்கல்விக்கு, அப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அரசுப்பள்ளிகளே ஆதாரமாக உள்ளன. ஆனால், அப்பள்ளிக்கட்டடங்கள் பராமரிப்பிலும், புதுப்பித்தல் பணிகளிலும் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது.
உதாரணமாக, குழிப்பட்டி மலை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் உள்ளது. இக்கட்டடம் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல், சிதிலமடைய துவங்கியது.
அப்போதே அப்பகுதி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பள்ளிக்கட்டடத்தை பராமரிக்க, உடுமலை ஒன்றிய நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளிக்கட்டடத்தை பராமரிக்க, உடுமலை ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். உடனடியாக பள்ளிக்கட்டடம் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு முடித்து, பல ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித பணிகளும் அங்கு நடக்கவில்லை. இதனால், கட்டடம் முற்றிலும் சிதிலமடைந்து, புதர் மண்டி, பாழடைந்து காணப்படுகிறது.
அப்பகுதி குழந்தைகள் மரத்தடியிலும், தற்காலிகமாக சிலரது வீடுகளிலும் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். பல்வேறு தயக்கங்களுக்கு பிறகு, கல்வி பயில வரும் பழங்குடியின குழந்தைகள், பள்ளி வகுப்பறைக்கட்டடம் மற்றும் இதர வசதிகள் இல்லாததால், கல்வியை தொடர தயக்கம் காட்டுகின்றனர்.
இதே போல், குருமலை மலை கிராம பள்ளிக்கட்டடமும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், குருமலை, குழிப்பட்டி பள்ளி கட்டடங்களை புதுப்பிக்க, 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் துவங்கவில்லை.
ஒன்றிய அதிகாரிகள் தரப்பில், வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தெரிவித்து, பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர்.
இதே நிலை நீடித்தால், அப்பகுதி குழந்தைகளின் கல்வி முற்றிலுமாக பாதிக்கப்படும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் நிலவும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வனத்துறை, ஒன்றிய நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையினரை ஒருங்கிணைத்து, மலை கிராமங்களிலுள்ள அனைத்து பள்ளிக்கட்டடங்களையும் புதுப்பித்து, அப்பள்ளிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இது குறித்து, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கும் தொடர்ந்து மனு அனுப்பி வருகின்றனர்.
இதர வசதிகளும் இல்லை ரோடு வசதியில்லாத மலை கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நாள்தோறும் சென்று வருவது சிரமமான விஷயமாகும். அவர்கள் அங்கு தங்கி பணி செய்யவும் எவ்வித வசதியும் இல்லை.
சத்துணவுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்புகளும் அங்கு இருப்பதில்லை. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

