தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள் மனசு: மொபைல் பூனைக்கு மணி கட்ட முடியுமா?

மக்கள் மனசு: மொபைல் பூனைக்கு மணி கட்ட முடியுமா?

மக்கள் மனசு: மொபைல் பூனைக்கு மணி கட்ட முடியுமா?


UPDATED : மார் 27, 2026 01:37 PM

ADDED : மார் 27, 2026 01:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 01:37 PM ADDED : மார் 27, 2026 01:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவதால் மூளை மழுங்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நடைமுறையில் சாத்தியம் இல்லை

ஸ்கிரீன் டைம் மிகவும் அதிகரித்துவிட்டது உண்மை தான். 5 நிமிடம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை போனை எடுத்து பார்க்கிறோம். முன்பெல்லாம் பலருடைய தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்போம்; இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. குறைக்க நினைத்தாலும், நடைமுறையில் அது முடிவதில்லை.
- விக்னேஷ்வர், நஞ்சுண்டாபுரம்.

தெரிந்தே செய்யும் தப்பு

இது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க ஒன்றும் இல்லை. நானே அனுபவித்து வருகிறேன். சில குழந்தைகள் மொபைல் பார்க்கும் போது 10 முறை அழைத்தாலும் திரும்பி பார்ப்பதில்லை. மொபைல் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், நம் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ரோஷன் கணபதி.

அடம் பிடிக்கும் குழந்தைகள்

குழந்தைகளின் மூளையில் பார்ப்பவை, கேட்பவை எல்லாம் பதிந்துவிடும். மொபைல் போன் கொடுத்து வளர்த்தால், அதில் வரும் தேவையில்லாத விஷயங்களும் மூளையில் பதிவாகின்றன. இதனால், அவர்களின் எதிர்காலமே பாதிக்கிறது. ஆனால், பெற்றோர் மறுத்தாலும் மொபைல் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளை என்ன செய்வது?
- டி.செல்வி, காங்கேயம்பாளையம்.

அதெல்லாம் முடியாதுங்க


டி.வி., அதிகம் பார்த்தா கண்ணு கெட்டுப்போகும்னு டாக்டர்ங்க சொன்னாங்க. இப்போ மொபைல் பார்த்தா மூளை கெட்டுப்போகும்னு சொல்றாங்க. என்ன வேணா சொல்லலாம். ஆனா இன்னிக்கு மொபைல் இல்லாமல் யாராச்சும் இருக்க முடியுமா? ஒரே ஒரு நாள் நெட் ஒர்க்கை கட் பண்ணி பாருங்க, மொத்த நாட்டுக்கும் மூளை குழம்பி போகும். இது தான் உண்மை.
- சி.என்.ரங்கசாமி சூலுார்.

மொபைல் ரொம்ப டேஞ்சர்ங்க

மொபைல் இல்லாத நாட்கள் மிகவும் அழகானவை. சமூக வலைத்தளங்களில் ஆயிரம் நண்பர்களை வைத்துள்ளவர்களுக்கு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் யார் என்று தெரிவதில்லை. குடிப்பழக்கம் போன்று மொபைல் பயன்பாடும் அடிமையாக்குகிறது. மூளை மங்குவது மட்டுமா? விவாகரத்து, கொலை, நோய் அனைத்துக்கும் ஆரம்ப புள்ளியே மொபைல் என்று தான்.
- சஞ்சய், பீளமேடு.

நடக்காத விஷயம், விடுங்க

சாட் ஜி.பி.டி., ஜெமினி போன்ற ஏ.ஐ.,யில் சரியான தகவல்கள் மட்டும் கச்சிதமாக கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு, எடிட்டிங் என எல்லாமே நொடியில் தயாராகிவிடுகிறது. எனது வேலைகளை ஸ்மார்ட்டாக சீக்கிரம் முடிக்க முடிகிறது. இதனால், சுயமாக சிந்திக்க தேவை இல்லாமல் போகிறது. இனிமேல் இதை குறைக்க வழி இல்லை.
- சுதாகரன், மலுமிச்சம்பட்டி.

சுய சிந்தனையை இழக்கிறோம்

மின்சாரத்தை போல், மொபைல் போன் இல்லாமல் இனி வாழ முடியாது என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. உபயோகப்படுத்த தெரியாமல் அடிமையாகி வருகிறோம்; சிந்தனைகளை மழுங்கடிக்கிறது என்பதை கடந்து, உறவுகளை பராமரிக்கவோ, பேசவோ தெரிவதில்லை. ஹைபர் டென்ஷனில் இருக்கின்றனர். பிரச்னைக்குரிய சமூகத்தை உருவாக்குகிறோம்.
- ஜவஹர் சுப்ரமணியம், டி.கே.மார்க்கெட்.

படிப்படியாக குறைக்கலாம்

மொபைல் பயன்பாடு ஆபத்தானது தான். உடல், மனம், நடத்தையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதை பார்க்கிறோம். பிள்ளைகளிடம் சிறு வயது முதலே பயன்பாட்டை குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் வீட்டில் மொபைல் பயன்பாட்டை படிப்படியாக குறைப்பது அவசியம்.
- செல்வகுமார், வடவள்ளி.

ஆபத்தை சந்திக்க போகுது

குடும்பத்தில் 4 பேர் இருந்தால், அவர்களுக்குள் பேசிக் கொள்வதில்லை. மொபைலில் மூழ்கி விடுகின்றனர். சாப்பிடும் இடத்தில், திருமண வீட்டில், துக்க வீட்டில் என அனைத்து இடத்திலும் பயன்படுத்துகிறார்கள். சமுதாயம் பெரிய ஆபத்தை சந்திக்கப் போகிறது. பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிப்பதை போல், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
- காளிச்சாமி, சின்னவேடம்பட்டி.

விழிப்புணர்வு அவசியம்

மனித நேரத்தை அபகரித்துவிட்டது. உறவினர்களை சந்திக்கச் சென்றால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் அமர்ந்து மொபைல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள். அவர்களுடன் பேச முடிவதில்லை. குழந்தைகளை கண்டிக்க முடிவதில்லை; அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிவிட்டது; கோபப்படுகிறார்கள். மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணிக்கிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- அப்துல் ஹக்கீம், கரும்புக்கடை.

நல்ல ஐடியா, ஆனா நடக்குமா?

மூளை திறன் பாதிப்பது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகளின் சுய சிந்தனை, படைப்பாற்றல் மிகவும் குறைந்து வருகிறது. எல்லா விஷயங்களுக்கும் மொபைல் மூலம் பதில் தேடுகின்றனர். இதனால், அவர்களின் சிந்தனை ஆற்றலும் துல்லியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இனி இதையெல்லாம் மாற்ற முடியுமா? டவுட் தான்.
- ரமா பிரியா, சரவணம்பட்டி.

பெற்றோர் மீது தவறு!
குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மொபைல் போன்கள் வழங்கப்பட்டன. இன்று உணவு ஊட்டவும், அழுகையை நிறுத்தவும் பெற்றோரே குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கிவிட்டனர். முடிந்த வரை குழந்தைகளிடம் இதை நிறுத்த வேண்டும். இல்லையேல் மூளை மழுங்குவது மட்டுமின்றி, தவறான வழிகளில் செல்லவும் தூண்டும்.
- சிவா, கள்ளிமடை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us