சட்டப்படிப்பு காலத்தை குறைக்கும் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
சட்டப்படிப்பு காலத்தை குறைக்கும் மனுவை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 06:01 PM

புதுடில்லி:
எல்.எல்.பி., எனப்படும் ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்பை, மூன்று ஆண்டாக குறைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
நுழைவுத் தேர்வு
தற்போது, எல்.எல்.பி., எனப்படும் ஐந்து ஆண்டு சட்டப் படிப்பை, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தேர்வு செய்ய முடியும். தேசிய சட்ட பல்கலைகள் சார்பில் நடத்தப்படும் சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு வாயிலாக மாணவர்கள் இதில் சேரலாம். அதுபோல, பட்டப் படிப்பு முடித்தவர்கள், மூன்று ஆண்டு சட்டப் படிப்பை படிக்க முடியும்.
இந்நிலையில், அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஐந்து ஆண்டு கால சட்டப் படிப்பை, மூன்று ஆண்டாக குறைக்க உத்தரவிடும்படி கோரப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டு என்பது நீண்ட காலமாக இருப்பதால், மாணவர்கள், குறிப்பாக பெண்கள் அதிக சிரமத்தை சந்திப்பதாக, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
மூன்று ஆண்டு சட்டப் படிப்பும் உள்ளதே. ஆனால், பள்ளிப் படிப்பை முடித்த பின், சட்டம் படிக்க ஐந்து ஆண்டு படிப்பு சரியானதே.
இந்த முறை தற்போது வரை சரியாகவே செயல்பட்டு வருகிறது. உண்மையில் இதுவே குறைவு என்று கூறுவோம்.
70 சதவீதம்
மாணவியருக்கு அதிக சிரமம் என்பதை ஏற்க முடியாது. தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் சேரும் வழக்கறிஞர்களில், 70 சதவீதம் பேர் பெண்கள். அதிகளவில் பெண்கள், சட்டப் படிப்பை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதனால், இந்த மனுவை விசாரிக்க இயலாது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.