பாரதியார் பல்கலை என்ற வீணையை, புழுதியில் எறியும் தமிழக அரசு
பாரதியார் பல்கலை என்ற வீணையை, புழுதியில் எறியும் தமிழக அரசு
UPDATED : ஜூலை 07, 2024 12:00 AM
ADDED : ஜூலை 07, 2024 10:38 PM

பாரதியார் பல்கலையில் காலிப்பணியிடங்களை ஆண்டுக்கணக்கில் நிரப்பாமல், பல்கலை நிர்வாகத்தை தமிழக அரசு சீர்குலைத்து வருகிறது.
கோவை பாரதியார் பல்கலையுடன் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 133 கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தரம் உட்பட பல விதங்களிலும், சர்வதேச, தேசிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ள பெருமைக்குரிய இந்த பல்கலையின் கீழுள்ள கல்லுாரிகளில், லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில், இந்த பல்கலை சாதனைகளைத் தாண்டி, ஊழல், முறைகேடு, சாதிப்பாகுபாடு என பல விதமான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி, சோதனைகளையே அதிகமாகச் சந்தித்து வருகிறது.
நிர்வாகம் ஸ்தம்பிப்பு
துணைவேந்தரே லஞ்சம் வாங்கும்போது, கையும் கையூட்டுமாகச் சிக்கி, சிறை சென்ற கொடுமையும், முதல் முறையாக இந்த பல்கலையில்தான் நடந்துள்ளது.
அதற்குப் பின், 2022 அக்., 18லிருந்து இப்போது வரையிலும், துணைவேந்தர் பணியிடம் காலியாகவே இருக்கிறது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் பொறுப்புக்குழுதான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்கலை நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது. இதன் காரணமாக, பல முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமலும், பல்கலை வளர்ச்சிக்குத் திட்டமிட முடியாமலும், சரிவைச் சந்தித்து வருகிறது.
ஏராளமான ஆசிரியர் பணியிடங்களும், 250க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியிடங்களும், ஆண்டுக் கணக்கில் காலியாகக் கிடக்கின்றன. இதன் காரணமாக, நிர்வாகமே ஸ்தம்பித்துக் கிடக்கிறது.
காலியான பணியிடங்களுக்கு, கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பெரும்பாலும், அதற்குத் தகுதியானவர்களாக, நேர்மையாக, பல்கலையின் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவர்களாக இல்லை என்பதே, இங்குள்ள பெரும்பான்மை அலுவலர்களின் குமுறலாகவுள்ளது. இந்த பல்கலையை தமிழக அரசு கைகழுவி விட்டதாகவே, அவர்கள் கருதுகின்றனர்.
காசுதான் பெருசு; கல்வி துாசு!
யு.ஜி.சி., விதிகளை மதிக்காமல், சம்பாத்தியத்துக்கான வழியை மட்டுமே பலரும் செய்து வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது; கல்வியின் தரம் குறைகிறது; வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. மற்ற பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது; அதனால் பணிகளில் நிறைய தவறு நடக்கிறது.
பல்கலையின் தரமும், பெயரும் நாளுக்கு நாள் மோசமாகி வருவது குறித்து, தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர், உயரதிகாரிகள் யாருமே துளியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில் யாரும் சீந்துவாரற்ற பல்கலையாக, பாரதியார் பல்கலை மாறிவிடுமோ என்று அலுவலர்கள் அச்சமும், வேதனையும் அடைந்துள்ளனர்.
பாரதியார் பல்கலையின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு, இங்குள்ள எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் யாருமே தொடர்ச்சியாக குரல் கொடுக்கவில்லை என்பதும், இவர்களின் வருத்தமாகவுள்ளது.
கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் இதுபற்றி சட்டசபையில் பேசி, அறிக்கையும் கொடுத்தார். அதற்கும் முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாரதியின் வரிகளிலேயே சொல்வதானால், நல்லதோர் வீணை செய்து நலங்கெடப்புழுதியில் எறிகிறது தமிழக அரசு!
துணையாக காலியிடங்கள்!
துணைவேந்தர் மட்டுமின்றி, 2016 ஏப்.,1 லிருந்து எட்டு ஆண்டுகளாக, பதிவாளர் பணியிடமும் நிரப்பப்படவில்லை.n தொலைதுாரக் கல்வி இயக்குனர் பணியிடம், 2015 ஆக., 20லிருந்தும், கூடுதல் இயக்குனர் பணியிடம், 2009 ஆக.,19 லிருந்தும், கல்லுாரி மேம்பாட்டுக்குழுவின் டீன் பணியிடம், 2018 பிப்.,28 லிருந்தும், மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம், 2018 ஜூன் 7 லிருந்தும் காலியாகவுள்ளன.
நிதி அலுவலர் பணியிடம், கடந்த பிப்., 15லிருந்து காலியாகவுள்ள நிலையில், உள்ளாட்சித் தணிக்கைத் துறையிலிருந்து ஒருவர், துணை இயக்குனர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார். 2018 பிப்., 28லிருந்து காலியாகவுள்ள, கூடுதல் நிதி அலுவலர் பணியிடத்துக்கு, அதே உள்ளாட்சித் தணிக்கைத் துறையிலிருந்து ஒருவர், உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பல்கலையின் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர், 2008 செப்.,16ல் ஓய்வு பெற்ற பின்பு, இப்போது வரை நிரப்பப்படாமல், மிகப்பழமையான காலியிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.