UPDATED : ஏப் 23, 2024 12:00 AM
ADDED : ஏப் 23, 2024 10:08 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட மீண்டும் மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரம் வேலை செய்யததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கூடும் இடங்களிலும், பஸ்ஸ்டாண்ட்களிலும் தமிழக அரசின் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தில் தானியங்கி இயந்திரம் அமைக்கப் பட்டது.
பாலிதீன் ஒழிப்பை முன்னிறுத்தி செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் ரூ.10 நாணயத்தை இயந்திரத்திற்குள் செலுத்தினால் மஞ்சள் துணி பை தானாகவே கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தானியங்கி மஞ்சள் பை இயந்திரம் செயல்படாததால் பொதுமக்களில் பலர் மஞ்சள் பையை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
பாலிதீன் பைகளின் செயல்பாட்டை குறைக்க துவங்கப்பட்ட இந்த திட்டமானது இயந்திர பழுதால் முடங்கி கிடப்பதால் சமூக மாற்றத்தை விரும்புவோரும் மீண்டும் பாலிதீன் பயன்பாட்டிற்கு திரும்பும் அபாயசூழல் உள்ளது. மஞ்சள் துணி பை தானியங்கி இயந்திரத்தை பழுதடையாமல் பராமரித்து நெகிழி இல்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.