அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 'எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட்' இல்லை
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 'எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட்' இல்லை
UPDATED : டிச 25, 2025 10:06 PM
ADDED : டிச 25, 2025 10:09 PM

மதுரை:
தமிழகத்தில் இதயநோய் மருத்துவத்துறையில் 'கேத்லேப்' வசதியுள்ள 18 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சிறப்புப் பயிற்சி (எப்.என்.பி.) பெற்ற 'எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட்' ஒருவர் கூட இல்லை.
இதயநோய் மருத்துவப்பிரிவில் எம்.டி., டி.எம்., முடித்த டாக்டர்கள் 'எப்.என்.பி' எனப்படும் 'பெல்லோஷிப் ஆப் நேஷனல் போர்டு' இரண்டாண்டு கால சிறப்பு பயிற்சி பெறுவர். அதிக இதயத்துடிப்பு பிரச்னையுள்ள நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள். தமிழகத்தில் மதுரையில் 3, திருநெல்வேலியில் 2, சென்னை அரசு மருத்துவமனை இதயநோய் சிகிச்சை துறையில் 2 'கேத்லேப்' கருவிகளும், 15 மருத்துவமனைகளில் தலா ஒரு கருவியும் உள்ளன.
ஆனால் 'அரித்மியா மேனேஜ்மென்ட்' எனப்படும் அதிக இதயத்துடிப்புகளை கையாளும் எப்.என்.பி., பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். இதயத்துடிப்பை (கார்டியாக் அப்லேஷன்) சரிசெய்யும் கருவி, இதயத்துடிப்பின் பாதையை வழிகாட்டும் (மேப்பிங்) கருவி, கருவியைக் கையாளும் சிறப்பு நிபுணர்கள் இல்லை. இதனால் ஒருசில அரசு மருத்துவமனைகளில் உள்ள இதய நோயாளிகளுக்கு முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 'எலக்ட்ரோ பிசியாலஜிஸ்ட்' நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இப்படிப்பு உள்ளது. இங்கு பயிற்சி பெற்றவர்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் தான் உள்ளனர். எனவே 'கேத்லேப்' வசதியுள்ள 18 அரசு மருத்துவமனைகளில் உள்ள உதவி பேராசிரியர்களில் குறைந்தது 10 பேரைத் தேர்ந்தெடுத்து அரசு செலவில் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். சிறப்புப்பயிற்சி பெற்ற டாக்டர்கள் மூலம் அரசு மருத்துவமனைகளில் இதயநோய் சிகிச்சைத்துறை புதிய பரிமாணத்தை நோக்கிச் செல்லும். சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

