சமூகநல விடுதி பாதுகாப்பில் குறைபாடில்லை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தகவல்
சமூகநல விடுதி பாதுகாப்பில் குறைபாடில்லை: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தகவல்
UPDATED : நவ 05, 2025 07:50 AM
ADDED : நவ 05, 2025 07:52 AM

பொள்ளாச்சி:
தமிழகத்தில் சமூக நீதி விடுதிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை, என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு கப்பளாங்கரையில், 1.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இக்கட்டட தரைதளம், முதல் தளம் போன்ற பகுதிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அதன்பின், பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கட்டப்படும் சமூக நல மண்டபத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்.
நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழக முதல்வர், ஆதிதிராவிட மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த, 300க்கும் மேற்பட்ட சமூக நல கூடம் கட்ட உத்தரவிட்டார். புளியம்பட்டியில், ஒரு கோடியே, 27 லட்சம் ரூபாய் செலவில் சமூக நல கூடம் கட்டப்படுகிறது. தரை தளத்தில் உணவுக்கூடம், கழிப்பிட வசதி உள்ளிட்டவையும், முதல் தளத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஹால் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இவை சுய உதவிக்குழுக்கள் வாயிலாக பராமரிக்கப்படும். இங்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், மக்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூகநல விடுதிகளில் போதிய இடவசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது. கேரம் போர்டு உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.வார்டன், பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக நல விடுதிகளில் பாதுகாப்பில் குறைபாடு இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

