பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்படுத்த ஆர்வமில்லை! முகாமுக்கான தொகையை அதிகரிக்க எதிர்பார்ப்பு
பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்படுத்த ஆர்வமில்லை! முகாமுக்கான தொகையை அதிகரிக்க எதிர்பார்ப்பு
UPDATED : செப் 24, 2025 08:19 AM
ADDED : செப் 24, 2025 08:20 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 36 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 6 பள்ளிகளில் மட்டுமே நடப்பாண்டு என்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமை, ஆசிரியர்களின் விருப்பமின்மை காரணமாக, அமைப்பு ஏற்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. அரசு பள்ளிகளில், மாணவர்களிடையே வாழ்வியல் சூழலை கற்றுக் கொடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் நாட்டு நலப்பணி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கமாக, ஆசிரியர், பாடப்புத்தகங்கள், தேர்வு, வகுப்பறை என, மாணவர்களின் கல்விப் பயணத்தின் நடுவே, களத்தில் நின்று சமூகத்தை உற்று நோக்கும் வாழ்வியலை இத்திட்டம் ஏற்படுத்துகிறது. தற்போது, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களை உள்ளடக்கியே நாட்டு நலப்பணி திட்டம் அமைக்கப்படுகிறது.
இதன் வாயிலாக, ரோடு அமைத்தல், குளங்களை துார்வாருதல், கல்வி பயிலாதவர்களுக்கு கற்றுக் கொடுத்தல், மரம் நடுதல், ஊனமுற்றோருக்கு உதவுதல், சுற்றுப்புறத்தை துாய்மையாக்குதல், கிராமங்களை தத்தெடுத்தல், மருத்துவ உதவி செய்தல், முதியோருக்கு உதவி செய்தல், கோயில்களை சுத்தப்படுத்துதல், கலைநிகழ்ச்சி நடத்துதல் போன்ற பொதுநலன் சார்ந்த செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 36 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தும், நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் செயல்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது.ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப் பள்ளி, கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆனைமலை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வடசித்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டுமே நாட்டு நலப்பணித் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை செயலாக்க வேண்டுமெனில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரே, திட்ட அலுவலராக இருத்தல் வேண்டும் என்பதால், பல பள்ளிகளில் அமைப்பு துவக்கப்பட்டும் கிடப்பில் உள்ளது. அந்த வரிசையில், 2025-26ம் கல்வியாண்டுக்கான என்.எஸ்.எஸ்., முகாமை இம்மாதம் இறுதியில் துவக்கவும், பள்ளிகளில் புதிதாக என்.எஸ்.எஸ்., அமைப்பு உருவாக்க விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமை, ஆசிரியர்களின் விருப்பமின்மை போன்ற காரணங்களால், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பின் உருவாக்கம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுநலன் சார்ந்த பண்புகளை இளம் வயதில், மாணவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற நோக்கில், 1969 செப்., 24ல் என்.எஸ்.எஸ்., அமைப்பு துவங்கப்பட்டது. அதன்படி, கிராமம், நகரம், ஏழை, வசதி படைத்தவர் போன்ற பல்வேறு நிலைகளில் இருந்து வந்த மாணவர்களின் குழுவே நாட்டு நலப்பணித் திட்டத்தில் பயணிக்கிறது.
ஆண்டுதோறும், 7 நாட்கள், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தவிர, மாதந்தோறும் ஏதேனும் 3 முதல் 4 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் என்.எஸ்.எஸ்., மாணவர்களின் பங்களிப்பு இருத்தல் வேண்டும்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் முகாமிற்கு, 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அந்த தொகையை பயன்படுத்தி உள்ளூரைத் தவிர்த்து, பிற கிராமங்களுக்குச் சென்று, ஏழு நாட்களுக்கு முகாம் நடத்த முடியாது. தொகை அதிகமாகும் என்பதால் நியமிக்கப்படும் திட்ட அலுவலர், முகாமை தவிர்த்து விடும் சூழல் நிலவுகிறது.
நாட்டு நலப்பணி திட்ட முகாம், புதிய இடம், அறிமுகம் இல்லாத மனிதர்கள், அனுபவிக்காத சூழல், சாப்பிட்டுப் பழகாத உணவு வகைகள், இப்படி தன் வசதிக்கு ஏற்ப இல்லாவிட்டாலும் அந்தச் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் நிலையை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.
முகாம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான தொகையை உயர்த்தி, உரிய நேரத்தில் அந்த தொகையை விடுவித்தால் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் என்.எஸ்.எஸ்., அமைப்பை உருவாக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.