UPDATED : ஆக 29, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 04:35 PM

இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவைப் போன்றதொரு வாய்ப்புகளும், வளங்களும் மிகுந்த நாடு உலகில் இல்லை.
சந்தைகளுக்கான தேவையும் நம்நாட்டில் பெருமளவு விரிவடைந்துள்ள நிலையில், இன்றைய இளம் பட்டதாரிகள், தொழில் முனைவோர்கள் நுகர்வோரின் தேவையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப புதுமையான ஐடியாக்களில் பொருட்களை அறிமுகப்படுத்தினால் வெற்றியை நிச்சயம் ருசிக்க முடியும். அதேதருணம், மலிவான விலையில் அத்தகைய புதுமையான, நவீன பொருட்களை சந்தைப்படுத்துவதும் சற்று சவாலான விஷயம்.
புத்தாக்க முயற்சி
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களது புத்தாக்க முயற்சிகளை உலகிற்கு எடுத்துச்செல்லும் வகையிலும் அரசாங்கம் பல திட்டங்களை வகுத்துள்ளது. எங்கள் நிறுவனம் சார்பிலும் சில முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகளவில் உருவாவதற்கு, சிறந்த தீர்வு காணும் சிந்தனை என்பது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, மின் சக்தியை குறைவாக பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று அதிகம் தேவைப்படுகின்றன. இதுபோன்ற பல்வேறு சமூக பிரச்னைகளுக்கும், மக்களின் தேவைக்கும் தீர்வு காணும் வகையில் புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்துவதோடு, பரிசுகளையும் வழங்குகிறோம்.
ஆராய்ச்சி அவசியம்
அனைத்து நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிப்பதும், நிதி ஒதுக்குவதும் மிக அவசியமான ஒன்று. ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, தனியார் நிறுவனங்கள் அரசின் உதவிக்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. அரசின் சட்டதிட்டங்களும், மக்களின் மனநிலையும் எதிர்பார்ப்புகளும் மாற்றம் காணும் நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை என்றால் தாழ்ந்த நிலைக்கே நிறுவனங்கள் செல்ல வேண்டியதிருக்கும்.
மக்களின் விருப்பங்களும், தேவைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில், நாங்கள் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒதுக்குகிறோம். உதாரணமாக, நுகர்வோருக்கோன மின்சாதனங்களை தயாரிக்கும் துறையை எடுத்துக்கொண்டேமேயானால், இரண்டு ஆண்டுகளில் அரசு விதிமுறைகள் மாற்றம் காணுகின்றன. ஆகவேதான், பிரத்யேகமாக இன்னோவேஷன் மையத்தை நிறுவியுள்ளோம்; அதில் 200 பேர் தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய முயற்சியின் வாயிலாக, 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஏற்ப, பெரும்பாலான மோட்டர் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நம் நாட்டிலேயே தயாரிக்க முடிகிறது.
-புரொமீத் கோஷ், நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., கிராம்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல் லிமிடெட், மும்பை.