3ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்: அரையாண்டு தேர்வுக்கு பிறகு வழங்க ஏற்பாடு
3ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்: அரையாண்டு தேர்வுக்கு பிறகு வழங்க ஏற்பாடு
UPDATED : டிச 13, 2025 09:49 AM
ADDED : டிச 13, 2025 09:49 AM

கோவை:
கோவையில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன், இவை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலை) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 171 அரசு, அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, 64,928 பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, 1 முதல் 7ம் வகுப்பு வரை 58,155 பாடப்புத்தகங்களும், 1 முதல் 8ம் வகுப்பு வரை 61,645 நோட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, மூன்றாம் பருவத்துக்கான, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சிப் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டுத் தேர்வு முடிந்து, விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

