sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிந்தனைக்களம்: மத்திய பட்டியலா - மாநில பட்டியலா எது சரி

/

சிந்தனைக்களம்: மத்திய பட்டியலா - மாநில பட்டியலா எது சரி

சிந்தனைக்களம்: மத்திய பட்டியலா - மாநில பட்டியலா எது சரி

சிந்தனைக்களம்: மத்திய பட்டியலா - மாநில பட்டியலா எது சரி


UPDATED : மே 25, 2025 12:00 AM

ADDED : மே 25, 2025 08:46 AM

Google News

UPDATED : மே 25, 2025 12:00 AM ADDED : மே 25, 2025 08:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் கல்வி தொடர்பாக மிகப்பெரிய விவாதம் நடத்தப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, மாநில பட்டியலில் கல்வியை சேர்ப்பது தொடர்பாக அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் மாறி மாறி விவாதிக்கின்றனர்.

குறிப்பாக, நீட், நெட், க்யூட் போன்ற மத்திய அமைப்புகள் நடத்தும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளில் நிர்வாக குளறுபடி, மோசடிகள், ஆள்மாறாட்டம், கேள்வித்தாள் முன்னதாகவே வெளியாவது போன்றவற்றால் இந்த விவாதம் நடக்கிறது.

நாங்களாக நடத்தினால், இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது என்பது மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறுபவர்களின் வாதமாக உள்ளது.

கல்வியின் தரம், தேர்வு நடத்துவதில் சிறப்பான நிர்வாகம், மாநிலத்தின் அதிகாரம் உள்ளிட்டவை ஒரு பக்கம் காரணமாக கூறப்பட்டாலும், அடிநாதத்தில் அரசியலும் இதில் பின்னியுள்ளது. குறிப்பாக மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறும் மாநிலங்களில், பெரும்பாலும் மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிரான கொள்கை உள்ள கட்சிகளின் ஆட்சியே உள்ளது. ஓட்டு வங்கியும் இதற்கு ஒரு காரணம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் நாட்டின் கொள்கையில், இதுபோன்ற மாறுபட்ட கருத்துகள், எதிர் கருத்துகள் இருப்பதை தவிர்க்க முடியாது.

வரலாறு


கடந்த, 1935ல் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதுதான், எந்தெந்த துறைகள், யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வகுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியே, சுதந்திரத்துக்குப் பின், மத்திய பட்டியல், மாநில பட்டியல் என்று மாறியது. பிரிட்டிஷ் காலத்தில் மாகாண அரசுகளிடமும், அதன்பின், மாநில அரசுகள் பட்டியலிலும் கல்வி இருந்தது.

கடந்த, 1975ல் காங்.,கின் இந்திரா பிரதமராக இருந்தபோது, எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பாக ஸ்வரண் சிங் கமிஷன் அமைக்கப்பட்டது.

அந்த கமிஷனின் பரிந்துரையின்படியே, 1976ல் அரசியலமைப்பு சட்டம் 42வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கல்வி, மத்திய பட்டியலுக்கு மாறியது. ஆனால், இதற்கான காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை.

இதற்கு முன்பாக மத்திய பட்டியலின், 65 மற்றும் 66வது வரிசைகளின்படி, உயர்கல்வி, தொழில் கல்வி மற்றும் கல்வித்தரம் உள்ளிட்டவை மத்திய அரசு வசமே இருந்தது. இதன்படியே, 1950களில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு உருவாக்கப்பட்டது.

கடந்த, 1977ல் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. அப்போது, இந்திரா ஆட்சியின்போது செய்யப்பட்ட, அரசியலமைப்பு சட்டம் 42வது திருத்தங்களை மாற்றும் வகையில், 44வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

லோக்சபாவில் நிறைவேறிய இந்த திருத்தம், ராஜ்யசபாவில் தோல்வி அடைந்தது. அதனால், கல்வி தொடர்ந்து மத்திய பட்டியலிலேயே இருந்து வருகிறது.

கடந்த, 1983ல் மத்திய அரசு நியமித்த சர்க்காரியா கமிஷன், மத்திய - மாநில உறவுகள் தொடர்பாக தன் பரிந்துரைகளை அளித்தது. அதில், கல்வி தொடர்ந்து மத்திய பட்டியலில் இருக்க பரிந்துரைக்கப்பட்டது.

வாக்குவாதங்கள்


கல்வி எந்த பட்டியலில் இருப்பது நல்லது என்பது தொடர்பாக, இரு தரப்புகளும் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

கூட்டு பொறுப்பு, சிறந்த கல்வி திட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கு உதவ முடியும், நாடு முழுதும் ஒரே மாதிரியான கொள்கை, எதிர்காலத்துக்கான திட்டங்கள், உலக அளவிலான போட்டியை சமாளிக்க முடியும் என, மத்திய பட்டியலுக்கு ஆதரவானோர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், மாநிலங்களின் அதிகாரம், தன்னாட்சி, சிறந்த நிர்வாகம், பொறுப்புக்குள்ளாகுதல், மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை இயற்ற முடியும் என, மாநில பட்டியல் கேட்போர் வாக்குவாதம் செய்கின்றனர்.

தீர்வு என்ன?


இவ்வாறு, கல்வி, மாநில பட்டியலில் இருக்க வேண்டுமா, மத்திய பட்டியலில் இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக, 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் வாத, விவாதங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக தென்மாநிலங்களில், இந்த பிரச்னை அரசியல் ரீதியில் பெரும் பேசு பொருளாகவே இருந்து வருகிறது.

இதற்கு என்ன தான் தீர்வு உள்ளது என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது மிகவும் சிக்கலான விஷயம்தான். இரு தரப்பிலும் கூறப்படும் வாத, விவாதங்கள் நியாயமானதாகவே உள்ளன.

இதில் இரண்டு முக்கிய பிரச்னைகள் உள்ளன. ஒன்று - தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தரம். இரண்டாவது - தன்னாட்சி அதிகாரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை.

இந்த இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், அவர்களுடைய வாதங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில், ஒரு தீர்வு ஏற்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசியல் சாசனம் அளித்துள்ளது.

தற்போதுள்ளபடி, மத்திய பட்டியலில் கல்வி இருந்தாலும், மாநில பட்டியலுக்கான வாதங்களை நிறைவேற்ற முடியும். இதற்கு, கோத்தாரி கமிஷன் கூறியுள்ளபடி, ஒத்துழைப்பு கூட்டாட்சி என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

அதாவது, நாடு முழுவதுக்குமான விரிவான கொள்கைகள், தரம், வழிகாட்டுதல்களை, மத்திய அரசு நிர்ணயிக்கலாம். தங்களுடைய மாநிலத்துக்கு ஏற்ற வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், அவற்றை நிறைவேற்றுவதற்கு தேவையான நெகிழ்வுத்தன்மையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை மத்திய அரசிடம் இருந்து, தற்போதைய மத்திய பட்டியலின் வாயிலாக பெற முடியும். அதனால், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், அதை எவ்வாறு ஏற்று நடக்கிறோம் என்பதில்தான், இந்தப் பிரச்னைக்கு தீர்வும் இருக்கிறது.

மத்திய பட்டியலில் இருந்தாலும், மாநிலங்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் தேவையான வளைவு, நெளிவுகளுடன், இரு தரப்பும் நடந்து கொண்டால் போதும்.

மோதல் போக்கினால் எந்த தீர்வும் ஏற்படாது. கூட்டாட்சி, ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு, மக்களின் நலன் ஆகியவை மையமாக இருக்கும்போது, கல்வி மத்திய பட்டியலில் இருந்தாலும், மாநில பட்டியலில் உள்ளது போன்று திட்டங்களை செயல்படுத்த முடியும் என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us