பாகிஸ்தான், போலந்தில் இருந்து பெற்றோருக்கு வந்த மிரட்டல்
பாகிஸ்தான், போலந்தில் இருந்து பெற்றோருக்கு வந்த மிரட்டல்
UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:17 AM
தட்சிண கன்னடா:
போலீஸ் அதிகாரிகள் போன்று பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகனை கைது செய்துள்ளோம். விடுவிக்க பணம் தர வேண்டும் என வந்த அழைப்புகள், பாகிஸ்தான், போலந்தில் இருந்து வந்துள்ளதாக, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டி:
மங்களூரில் ஜூன் 11, 12ம் தேதிகளில் நகரின் பல பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, சிலர் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் பேசியவர்கள், தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று ஹிந்தியில் பேசி, உங்கள் மகனை கைது செய்துள்ளோம். விடுவிக்க வேண்டுமானால், 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் அதர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று விசாரித்த போது, அவர்களின் பிள்ளைகள், வகுப்பறையில் இருப்பது தெரிந்து நிம்மதி அடைந்தனர். உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்தியதில், இந்த அழைப்புகள் அனைத்தும் வாட்ஸாப் மூலம் செய்யப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும், போலந்து, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளன. இதில் பெரும்பாலும் பி.யு., கல்லுாரியில் படிக்கும் பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளன.
பள்ளி நேரத்தில் பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மங்களூரு நகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுபோன்ற அழைப்புகளுக்கு பெற்றோர் பயப்பட வேண்டாம். வாட்ஸாப்பில் தெரியாத வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், தவிர்க்கவும். இதுபோன்று அழைப்பு வந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கோ அல்லது 1930 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.