நாகையில் டைடல் பார்க் டெண்டர் டெல்டாவில் ஐ.டி., வேலைவாய்ப்பு
நாகையில் டைடல் பார்க் டெண்டர் டெல்டாவில் ஐ.டி., வேலைவாய்ப்பு
UPDATED : ஜூன் 05, 2025 12:00 AM
ADDED : ஜூன் 05, 2025 08:51 AM

சென்னை:
நாகை மாவட்டத்தில், மினி டைடல் பார்க் கட்டுவதற்கான வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை சேவை பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, தமிழக அரசு, டெண்டர் கோரியுள்ளது.
ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை சென்னையில் இருப்பது போல், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, சிறிய நகரங்களில், 50,000 - 60,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அங்குள்ள அலுவலக இடங்கள், ஐ.டி., நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, அரசு அறிவித்துள்ளது. எனவே, அம்மாவட்டங்களில் கனரக தொழிற்சாலை துவங்க முடியாது என்பதால், ஐ.டி., வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இதற்காக, தஞ்சையில் டைடல் பார்க் கட்டப்பட்டு அலுவலக இடங்கள், ஐ.டி., நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது, டெல்டா மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாகை மாவட்டத்தில், டைடல் பார்க் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டட வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை சேவைக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு, டைடல் பார்க் நிறுவனம், டெண்டர் கோரியுள்ளது.

