பேராசிரியர் நியமன விவகாரம் நடவடிக்கை எடுக்க அவகாசம்
பேராசிரியர் நியமன விவகாரம் நடவடிக்கை எடுக்க அவகாசம்
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 10:50 AM

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சையத் ரஹமத்துல்லா என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை பல்கலையில், யு.ஜி.சி., விதிகளை மீறி, பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 2018 பிப்ரவரியில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், நியமனங்களில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஒரு குழுவை துணைவேந்தர் அமைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; எந்த நடவடிக்கையும் இல்லை.
குழு அமைக்கக் கோரி, துணைவேந்தருக்கு நானும் மனு அளித்தேன்; எந்த பதிலும் இல்லை. எனவே, குழு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் முறையீட்டை இதுவரை பரிசீலிக்கவில்லை. துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால், மனுதாரரின் மனுவை பரிசீலிக்க, ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கும்படி, பல்கலை பதிவாளர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இந்த வழக்கின் தகுதி குறித்து, நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2018 ஜூனில் அளித்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்த, பல்கலை துணைவேந்தருக்கு உத்தரவிடப்படுகிறது. விசாரணையின் முடிவில், பேராசிரியர்கள் நியமனத்தில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.