சரியான நேரத்தில் தேவை நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு
சரியான நேரத்தில் தேவை நுழைவுத்தேர்வு விழிப்புணர்வு
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 07:20 PM

திருப்பூர்:
திருப்பூரில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் நுழைவுத் தேர்வுகள் குறித்து கல்வியளர் அஸ்வின் பேசினார்.
அவர் பேசியதாவது:
இன்றைய மாணவர்கள்தேசிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வினாத்தாளில், பாடக்கருத்துகள் அடிப்படையில், பிரச்னைக்கு தீர்வு காணுதல், வேகமாக முடிவெடுக்கும் கேள்விகளே அதிகம் இடம்பெறும். சிந்திக்கும் திறன் அடிப்படையில் விடை காண வேண்டும். ஆர்கிடெக்ட் படிக்க, ஜெ.இ.இ., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால், என்.ஐ.டி., மற்றும் ஸ்கூல் ஆப் பிளானிங் ஆர்கிடெக்ட் கல்வி நிறுவனங்களில் சேரலாம். நாட்டா நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வாய்ப்பு கிடைக்கும்.
சி.யு.இ.டி., தேர்வு எழுதினால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை பெறலாம். வேளாண் படிப்பில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது.ராணுவத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு, மாதம் தோறும் உதவித்தொகை அளிக்கப்படும். வேலை வாய்ப்பும் கிடைக்கும். இதில், கலை பாடப்பிரிவு மாணவர்களும் சேரலாம்.
இந்தியாவில், 23 ஐ.ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. மொத்தமுள்ள, 17, 320 இடங்களில், கடந்தாண்டு, தமிழகத்தில் 545 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில், மொத்தமுள்ள இடங்களில், ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து, சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே சேர்கின்றனர். சரியான நேரத்தில் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். நுழைவுத்தேர்வுகளை எதிர்கொண்டால், பல்வேறு வாய்ப்புகள் உருவாகும்.
கப்பற்படை, விமானப்படை கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவுகளில் வாய்ப்பு உள்ளது. கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள், சென்னை மேத்தமெடிக்ஸ் இன்ஸ்டிடியூஷனில் சேர்ந்தால், அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும். பல்வகை நுழைவு தேர்வுகளுக்கு திட்டமிட்டு படித்தால், நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்.