UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 11:03 AM

பள்ளி மற்றும் கல்லூரிகளில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டும் போதுமானதல்ல... அடுத்து உயர்கல்வியை தொடர தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனம் சிறந்ததாக இருத்தல் வேண்டும் என்று கல்வியாளர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய கல்வியாளர்கள் தரும் 'டிப்ஸ்' இதோ:
அங்கீகாரம்:
அங்கீகாரம் பெற்ற கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தேர்ந்தெடுக்கவுள்ள கல்லூரியில் அனைத்து துறைகளும் முறையான அங்கீகாரம் பெற்று துவங்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வது அவசியம். அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படிக்கும் படிப்பானது எதிர்கால வேலை வாய்ப்புகளை பாதிக்கும் அபாயம் உள்ளது.
பாடத்திட்டம்:
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு பாடத்திட்டம் அமைந்திருப்பது அவசியம். புதிய தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கப்பட்டுள்ள அம்சங்கள் பாடத்திடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகள் ஒருங்கிணைப்புடன் கூடிய பாடத்திட்டம் மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தைத் தூண்டி கற்றல் திறனை மேம்படுத்தும். வகுப்பு பாடமுறையும், செயல்முறை பாடமுறையும் சமநிலையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
ஆசிரியர்கள்:
மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. தரமான ஆசிரியர்களால் தரமான மாணவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களின் கல்வித்தகுதி, தற்போதைய ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு தயார் செய்துள்ளதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறான ஆசிரியர்கள் கல்லூரியில் பணியாற்றுவதை முன்னாள் மாணவர்கள் வாயிலாக உறுதி செய்து கொள்ளலாம்.
உள்கட்டமைப்பு:
சிறந்த பொறியியல் கல்விக்கு மேம்பட்ட வசதிகள் அவசியம். நவீன ஆய்வகங்கள், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டறைகள் மற்றும் விரிவான தலைப்புகளைக் கொண்ட நூலகங்கள் ஆகியவை இதில் அடங்கும். வகுப்பறை முதல் நடைமுறை பயிற்சி வகுப்புகள் வரை மாணவர்களுக்கு பயனுள்ள முறையில் இருப்பது முக்கியம். கல்லூரியை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்:
இன்டர்ன்ஷிப் என்பது படித்து முடித்தப்பிறகு வேலையில் சேருவதற்கான முன்னோடி பயிற்சியாகும். இதை தொழில்முறை உலகத்திற்கான நுழைவாயில் என்றும் சொல்லலாம். படிக்கும் பொழுது துறை சார்ந்த நிறுவனங்களில் குறுகியகால பயிற்சி பெறுவது மாணவர்கள் அனுபவ அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். வலுவான தொழில் தொடர்புகளைக் கொண்ட கல்லூரிகள் மாணவர்களுக்கு அத்தியாவசியமான நிஜ உலக அனுபவங்களை வழங்குகின்றன. மாணவர் வாழ்க்கையிலிருந்து தொழில்முறை வேலைவாய்ப்புக்கு எளிதாக மாறுவதற்கு இந்த இன்டர்ன்ஷிப் உதவுகிறது.
தரவரிசை:
சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் வழங்கும் கல்லூரிகளுக்கான தரவரிசையை கருத்தில் கொள்வதும் நல்லது.
வளாக வாழ்க்கை:
கல்லூரிகளில் செயல்படும் மாணவர் கிளப்புகள், குழுக்கள், சமூக கல்வி சார்ந்த அழுத்தங்களில் இருந்து விடுபட உதவுகின்றது. மேலும் குழுப்பணி, தலைமைத்துவம், நேர மேலாண்மை ஆகிய திறன்களை வளர்க்கவும் உதவுகிறது. இவ்வாறான மாணவர் அமைப்புகள் கல்லூரிகளில் இருப்பதையும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சி:
ஆராய்ச்சியில் மாணவர் பங்கேற்பை ஊக்குவிக்கும் கல்லூரியைத் தேடுங்கள். இந்த வாய்ப்புகள் மாணவர்களின் பாட அறிவுடன் சமூகம் சார்ந்த அக்கறையையும் மேம்படுத்தும்.
வளாக நேர்காணல்:
கல்லூரிகளில் நடத்தப்படும் நேர்காணலும், பங்கு பெறும் நிறுவனங்களும், வேலை வாய்ப்புப் பெறும் மாணவர்களின் சதவீதம் ஆகியவற்றைக் குறித்து மாணவர்கள் தெளிவான நிலைப்பட்டை கொண்டிருப்பது அவசியம். தங்கள் குறிக்கோள் லட்சியத்தை அடையவும், தங்களுடைய கனவை நனவக்கிக்கொள்ளவும் இந்த வளாக நேர்காணல் வரப்பிரசாதமாக உள்ளது.