நுண்கடன்களை திருப்பி செலுத்தாததில் நெல்லை, கோவை, மதுரை முன்னணி
நுண்கடன்களை திருப்பி செலுத்தாததில் நெல்லை, கோவை, மதுரை முன்னணி
UPDATED : ஜூன் 12, 2024 12:00 AM
ADDED : ஜூன் 12, 2024 04:26 PM
மும்பை:
தேசிய அளவில், நுண்கடன் பிரிவில் அதிக வாராக் கடன் கொண்ட மாவட்டங்களாக, முதல் மூன்று இடங்களில் திருநெல்வேலி, கோவை, மதுரை ஆகியவை உள்ளன.
இதுகுறித்து, தனியார் நிறுவன ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் காலாண்டில், நுண் கடன்கள் வழங்குவது 26 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த சில காலாண்டுகளாக பெரிய அளவில் ஏற்றம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மார்ச் காலாண்டில் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் 4.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 38,072 கோடி ரூபாய், அதாவது 8.60 சதவீதம், வாராக் கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாராக் கடனை பொறுத்தவரை திருநெல்வேலி, கோவை மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்கள் தான் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
அதிக எண்ணிக்கையிலான செயல்பாட்டில் உள்ள கடன்களைக் கொண்ட மாநிலமாக, கர்நாடகா விளங்குகிறது.மேற்கு வங்கம், பீஹார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வேகமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன.
நுண் கடன்கள் வழங்கியதில், 39.20 சதவீத பங்குடன் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முதலிடத்திலும்; 33.20 சதவீத பங்குடன் வங்கிகள் இரண்டாம் இடத்திலும்; 16.90 சதவீத பங்குடன், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.