3வது இடத்தில் இருந்து 8வது இடம் பிளஸ் 1 தேர்ச்சியில் சறுக்கிய திருப்பூர்
3வது இடத்தில் இருந்து 8வது இடம் பிளஸ் 1 தேர்ச்சியில் சறுக்கிய திருப்பூர்
UPDATED : மே 20, 2025 12:00 AM
ADDED : மே 20, 2025 10:33 AM
திருப்பூர் :
பிளஸ் 1 தேர்வு முடிவில், கடந்த முறை, மூன்றாம் இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம், இம்முறை, ஐந்து இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடம் பெற்றுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வை, 12 ஆயிரத்து, 224 மாணவர்கள், 14 ஆயிரத்து, 559 மாணவியர் என, 26 ஆயிரத்து, 783 பேர் எழுதினர். இவர்களில், 25 ஆயிரத்து, 341 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம், 94.62. மாணவர்களில், 957 பேரும், மாணவியரில், 485 பேரும் என, 1,442 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த முறை மாணவர், தேர்ச்சி சதவீதம், 93.10; இம்முறை, 0.93 சதவீதம் குறைந்து, 92.17. மாணவியர் தேர்ச்சி, 97.07 ல் இருந்து, 0.4 சதவீதம் குறைந்து, 96.67. ஒட்டு மொத்த சதவீதம் கடந்தமுறை, 95.23; இம்முறை, 0.61 சதவீதம் குறைந்து, 94.62.
சறுக்கும் சதவீதம்
கடந்த, 2018 முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. 2018 மற்றும், 2019ல், தொடர்ந்து இரண்டாவது இடத்தை திருப்பூர் பெற்றது. 2020ல் மூன்று இடங்கள் பின்தங்கி, ஐந்தாமிடம். 2022ல் 5ல் இருந்து ஆறு இடங்கள் பின்தங்கி, 11வது இடம் பெற்றது, 2023ல் பத்து இடங்கள் முன்னேறி, முதலிடம் பெற்று, பாராட்டு பெற்றது.
கடந்த 2024ல், மூன்றாமிடம் பெற்ற நிலையில், நடப்பாண்டு, ஐந்து இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடம் பெற்றுள்ளது. பிளஸ் 1 தேர்ச்சியை பொறுத்த வரை, 2020ல் கண்ட ஏற்றம், 2024 மற்றும், 2025 ல் சறுக்கலை சந்தித்துள்ளது.