திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் பிளஸ் 2 சாதனை மாணவர்களுக்கு பரிசு
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் பிளஸ் 2 சாதனை மாணவர்களுக்கு பரிசு
UPDATED : மே 21, 2024 12:00 AM
ADDED : மே 21, 2024 09:24 AM
திருப்பூர்:
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்று, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா, ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்தது.
சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆலோசனைக் குழு உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் திருக்குமரன் வரவேற்றார். 'திருப்பூரின் வளர்ச்சியும் சங்கத்தின் சமூகப் பணிகளும்' எனும் தலைப்பில் இணைச் செயலாளர் குமார் துரைசாமி பேசினார். சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
பிளஸ் 2 பொதுதேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற யுனிவர்சல் மெட்ரிக் பள்ளி மாணவி மகாலட்சுமி-க்கு 10 ஆயிரம் ரூபாய்- ஊக்கத்தொகை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மாநகராட்சிக்கு உட்பட்ட, 15 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டும், நினைவுப்பரிசும், 50 மாணவ, மாணவியருக்கு 2.08 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
துணைத் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார். உறுப்பினர் சேர்க்கை குழு சேர்மன் சிவசுப்பிரமணியம், ஆர்பிட்ரேசன் சப் கமிட்டி சேர்மன் ராமு, செயற்குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் விழா
முன்னதாக, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், இத்தகைய விழா இனி ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெறும்; அடுத்தாண்டு முதல் பிளஸ் 2 போன்றே, பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்குப் பாராட்டும், பரிசளிப்பும் நடைபெறும் என்று தெரிவித்தார்.