கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மாதிரி தேர்வு
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 மாதிரி தேர்வு
UPDATED : அக் 16, 2026 05:17 PM
ADDED : அக் 16, 2026 05:18 PM
கரூர்:
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்வர்கள் தேர்வை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொள்ளவும், நேர மேலாண்மையை கற்று கொள்ளவும், மாதிரி தேர்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு, மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய நுாலக மையங்களில் நடந்தது. இதில், கரூர் மாவட்ட மைய நுாலகம் மட்டுமின்றி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, புஞ்சை புகழூர் ஆகிய கிளை நுாலகங்கள், கரூர், புகழூர் அறிவுசார் மையங்கள் ஆகியவற்றில் இத்தேர்வுகள் நடந்தன.
காலை 10:00 முதல் மதியம் 01:00 மணி வரை, டி.என்.பி.எஸ்.சி., முதன்மை தேர்வு, அனைத்து நெறிமுறைகளுடனும் முறையாக நடந்தது. மாவட்டம் முழுவதிலும் இருந்து, 117 போட்டி தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வை எழுதினர்.
அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் அதிகளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், நடத்தப்பட்ட மாதிரி தேர்வு, தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
