டி.என்.பி.எஸ்.சி., மன்னிப்பு கேட்க தலைவர்கள் வலியுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி., மன்னிப்பு கேட்க தலைவர்கள் வலியுறுத்தல்
UPDATED : செப் 03, 2025 12:00 AM
ADDED : செப் 03, 2025 07:18 PM
சென்னை:
'அய்யா வைகுண்டரை அவமதித்த, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
அவர்கள் அறிக்கை:
சரத்குமார்: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வில், வைகுண்ட சுவாமிகளின் கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்க என்ற கேள்விக்கான விடையில், 'முடிசூடும் பெருமாள்' என்றும், 'முத்துக்குட்டி' என்றும் அழைக்கப்பட்டார் என்ற பதிலை, ஆங்கிலத்தில், 'முடிவெட்டும் கடவுள்' என, குறிப்பிட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
இது, தமிழகத்தின் முதன்மை அதிகாரிகளையும், அறிவார்ந்த, திறன் வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தின் தரத்தின் மீதும், நம்பிக்கையற்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.
தென் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திலும், அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றும், லட்சக்கணக்கான மக்களின் மனதை இச்செயல் புண்படுத்தி இருக்கிறது. இதற்கு, டி.என்.பி.எஸ்.சி., மன்னிப்பு கோர வேண்டும்.
என்.ஆர்.தனபாலன்: லட்சக்கணக்கான மக்கள் வணங்கும் தெய்வத்தின் பெயரை, இழிவுப்படுத்தும் நோக்கத்தில், தேர்வு வினாத்தாளில் கேள்வி கேட்டிருப்பது, கல்வி மற்றும் பொது அறிவு இல்லாதவர்களின் கைகளில், டி.என்.பி.எஸ்.சி., சிக்கி இருப்பதை காட்டுகிறது. இதற்காக, தமிழக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்.
இது போன்று யாரையும் இழிவுப்படுத்தாமல், யாருடைய மனதையும் புண்படுத்தாமல், கல்வி மற்றும் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை, சரியான முறையில் தேர்வு செய்தும், அதை, பின் ஒரு குழுவினர் சரிபார்த்தும் வெளியிட வேண்டும். இதற்கு டி.என்.பி.எஸ்.சி., வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தந்தையை கூறினால் சும்மா இருப்பாரா ஸ்டாலின்?
தமிழக பா.ஜ., தலைவர், நாகேந்திரன் கூறியதாவது:
கலியுகத்தை அழித்து, உலகில் தர்மயுகத்தை ஸ்தாபிக்க அவதாரம் எடுத்த அய்யா வைகுண்டரை பற்றி, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆங்கில கேள்வியில், 'காட் ஆப் ஹேர் கட்டிங்' என்று இழிவாக குறிப்பிட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது.
தென் மாவட்டங்களில், பல லட்சக்கணக்கான மக்களால் போற்றப்படும் தெய்வீக நிலையை அடைந்தவர் வைகுண்டர். மக்கள் அவரை சமத்துவத்தின் நாயகனாக, அவதார புருஷனாக முடிசூட்டி, 'முடிசூடும் பெருமாள்' என்னும் பெயரால் அழைத்தனர். பெயரை மொழிபெயர்த்து சொல்கிறேன் என்று, மக்களால் தெய்வமாக போற்றப்படும் வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா?
இதே அரசு பணியாளர் தேர்வில், தன் தந்தை குறித்தோ, தி.மு.க., தலைவர்கள் குறித்தோ, இப்படிப்பட்ட தவறுகள் நடந்தால், பார்த்து கொண்டு சும்மா இருப்பாரா முதல்வர் ஸ்டாலின்?
இவ்வாறு கூறியுள்ளார்.