நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! சபையில் அமளி
நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! சபையில் அமளி
UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:41 PM
புதுடில்லி:
ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு பின், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தனி விவாதம் நடத்துவதற்கு அனுமதிப்பது குறித்து உத்தரவாதம் அளிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய நேரிட்டது.
லோக்சபாவில் காலை அலுவல்கள் துவங்கியதும், ஜனாதிபதி உரை மீது விவாதம் நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லா தயாரானார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து இந்த சபையில் விவாதம் நடத்த விரும்புகிறோம். இது முக்கியமான பிரச்னை. இரண்டு கோடி இளைஞர்கள் இந்த முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசடி
கடந்த ஏழு ஆண்டுகளில், 70 தடவைக்கும் மேல் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் இப்பிரச்னை குறித்து பேச அனுமதி கேட்கிறோம்.
இவ்வாறு ராகுல் கூறியதும், சபாநாயகர் ஓம்பிர்லா, ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை எக்காரணம் கொண்டும் ஒத்திவைத்துவிட்டு இந்த விவாதம் நடத்த முடியாது. சபைக்கு என்று மரபுகள் உள்ளன. அதை பின்பற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த ராகுல், இந்த மாண்பு மிக்க பார்லிமென்ட் வாயிலாக மாணவர்களுக்கு பொறுப்பான செய்தி அனுப்ப விரும்புகிறேன். அதற்கு கட்டாயம் நீட் முறைகேடு குறித்த தனி விவாதம் தேவையாக உள்ளது என்றார்.
அதற்கு சபாநாயகர், அது குறித்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
மற்ற சமயங்களில் எந்த தலைப்பிலிருந்தும் பேசலாம். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் வேறு எந்த விஷயங்களை பேசுவதற்கும் அனுமதி இல்லை.
வெளிநடப்பு
சபைக்கு என்று மரபுகளும் விதிமுறைகளும் உள்ளன. என் நீண்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். தற்போது ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை நடத்துவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும்.
இவ்வாறு கூறியதும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்நாத் சிங் கூறியதை ஏற்கிறேன். அப்படியானால், இந்த ஜனாதிபதி உரை மீதான விவாதம் முடிந்ததும் ஒருநாள் தனியாக ஒதுக்கி நீட் குறித்த விவாதம் நடத்த வேண்டும். அதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒன்று திரண்டு அமளியில் இறங்கின. சபாநாயகர் ஓம் பிர்லாவோ, ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பேசும்படி, பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூரை அழைத்தார்.
இதையடுத்து விவாதம் துவங்கவே, அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சில நிமிடங்களுக்கு பின் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.