புகையிலை ஒழிப்பு மருத்துவ கல்லுாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்
புகையிலை ஒழிப்பு மருத்துவ கல்லுாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தல்
UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 03:26 PM
சென்னை:
புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை, மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் ராகவ் லங்கர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புற்றுநோய், இதய பாதிப்பு, சர்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு போன்ற தொற்றா நோய்களுக்கு, புகையிலை பழக்கம் முக்கிய காரணம். புகையிலை பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் நலக்குறைபாடுகள், உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அதுதொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்த, உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மே 31ல் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குறிப்பாக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு சொற்பொழிவுகள், விவாத நிகழ்ச்சிகள், அமர்வுகளை நடத்த வேண்டும்.
புகையிலை சார்ந்த நோய்களை கண்டறிவதற்கான, மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். விழிப்புணர்வு கட்டுரை போட்டி, போஸ்டர் தயாரித்தல், குறும்படம், சமூக வலைதள பிரசாரப் போட்டிகளை முன்னெடுக்கலாம்.
மருத்துவக் கல்லுாரி வளாகங்கள், விடுதி வளாகங்களிலும், புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

