பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை ஜோர்; பெற்றோர் அச்சம்
பள்ளிகளுக்கு அருகே புகையிலை விற்பனை ஜோர்; பெற்றோர் அச்சம்
UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 09:47 AM

பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை குறையாத நிலையில், ஆண்டு தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும், உணவுப் பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அப்படி இருந்தும் கூலிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன.
கண்டுகொள்வதில்லை
சில்லரை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, வழக்கு போடுவது என கணக்கு காட்டும் அதிகாரிகள், இவற்றின் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்வதில்லை.
மேலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு, செமஸ்டர் தேர்வுகள் நெருங்குகின்றன.
மாணவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக புகையிலை பொருட்கள் புழக்கத்தில் இருப்பதால், படிப்பை முடித்து எதிர்காலத்தை துவங்குவதற்கு முன்பே, தவறான பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்கள் வாழ்க்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களை பெற்றோர் கண்டறிந்து கண்டித்தாலும், அவர்களுக்கு தெரியாமல் பழக்கத்தை தொடரும் போக்கு தென்படுகிறது. புகையிலை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதால், குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பெற்றோருக்கு அச்ச உணர்வு உண்டாகியுள்ளது.
விழிப்புணர்வு
அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பள்ளி, கல்லுாரிகளில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், உணவு பாதுகாப்புத் துறை, போலீசார் இணைந்து எடுத்து வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.