UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:53 AM
புதுச்சேரி:
கல்லுாரி மாணவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் உறவினர்கள் கல்லுாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி சொக்கநாதன்பேட்டை வடக்கு அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். முத்திரையர்பாளையம் கூட்டுறவு வங்கி உதவியாளர். இவரது மனைவி தேவி. இவர்களது மூத்த மகள் கிருஷ்ணசூர்யா, 18; ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ. பி.எட்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஒன்றரை மாதமாக கல்லுாரியில் எழுத்து வேலை அதிகம் கொடுப்பதாகவும், தன்னால் எழுத முடியவில்லை. தன்னை வேறு பாடத்தில் சேர்த்து விடும்படி பெற்றோரிடம் கூறி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் கிருஷ்ண சூர்யா பாடம் சம்பந்தமான எழுத்து வேலை செய்து கொண்டிருந்தார். இரவு 7:30 மணிக்கு சாப்பிட அழைத்தபோது, கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, கிருஷ்ண சூர்யா மின் விசிறியில் துாக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
திடுக்கிட்ட பெற்றோர் கதவை உடைத்து கிருஷ்ண சூர்யாவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
கல்லுாரியில் அதிக எழுத்து வேலை கொடுத்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிக எழுத்து வேலை கொடுத்து மனஉளைச்சல் ஏற்படுத்திய கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மாணவியின் உறவினர்கள் நேற்று காலை கல்லுாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ரெட்டியார்பாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, வழக்கு விசாரணை கோரிமேட்டில் நடப்பதால் அங்கு சென்று முறையிடக்கூறி அனுப்பி வைத்தனர்.