9ம் வகுப்பு கொரோனா பேட்ச் பிளஸ் 2வில் முதலிட சாதனை
9ம் வகுப்பு கொரோனா பேட்ச் பிளஸ் 2வில் முதலிட சாதனை
UPDATED : மே 13, 2024 12:00 AM
ADDED : மே 13, 2024 09:29 AM
திருப்பூர்:
கொரோனா கால கட்டத்தில் தேர்வு எழுதாமல், ஒன்பதாம் வகுப்பை கடந்து வந்த மாணவ, மாணவியர் தான், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று, திருப்பூருக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த, 2020 - 21ம் கல்வியாண்டு நிறைவில், தேர்வுகள் நடக்காமல், அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புக்கு, 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
இதனால், 2024ல் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர் தேர்ச்சி சதவீதத்தை நம்பி, பயம் கலந்த எதிர்பார்ப்புடன், திருப்பூர், மாவட்ட கல்வித்துறையினர் காத்திருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் 9ம் வகுப்பு கொரோனா பேட்ச் மாணவர்கள், தற்போது (2024ல்) மாநிலத்தில் முதலிடம் பெற்று அசத்தி யுள்ளனர். இதனால், மாவட்ட கல்வித்துறை ஆச்சரியமும், நிம்மதியும் அடைந்துள்ளது.
இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:
கல்வியாண்டு துவக்கம் முதலே மாணவர்களை தயார்படுத்த, சிறப்பு வகுப்புகளை நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. பாட ஆசிரியர்களுக்கு என்னென்ன தேவை, பிரச்னை என்பது களையப்பட்டு, தேர்ச்சி சதவீதத்தில் கவனம் செலுத்துங்கள் என தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். படித்து, ஆர்வமுடன் தேர்வெழுதிய மாணவர்கள், வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்களால் தான் முதலிடம் சாத்தியமாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.