அனைத்து ஜாதி அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள் செய்த செயலுக்கு பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம்
அனைத்து ஜாதி அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள் செய்த செயலுக்கு பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம்
UPDATED : ஜூன் 30, 2025 12:00 AM
ADDED : ஜூன் 30, 2025 08:23 AM
மதுரை:
சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள், அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளியில் படித்தவர்கள்.
அதை மறைத்து ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதா என மதுரை மீனாட்சி அம்மன் உட்பட கோவில்களின் பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் சிலர், ஆபாச நடனம் ஆடியது, பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி அடித்தது போன்ற செயல்களை, பாரம்பரிய அர்ச்சகர்களாலும், பக்திநெறியோடு ஆன்மிகத்தை நாடியவர்களாலும் ஏற்க முடியவில்லை.
பாரம்பரிய அர்ச்சகர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில், யாருக்குமே இவர்களை அடையாளம் தெரியவில்லை. இவர்கள், கும்பாபிஷேக பணிகளுக்கு வந்தவர்கள். பாரம்பரிய அர்ச்சகர்கள் இல்லை. தமிழக அரசின் அறநிலையத்துறை நடத்தும் அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள். பயிற்சியில் இருப்பவர்கள்.
இதை மறைத்து விட்டு ஒட்டுமொத்தமாக அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.
பாரம்பரிய முறைப்படி அர்ச்சகர்கள் பயிற்சிக்கு வருபவர்கள், வேத ஆகம பாடசாலைகளில் மிகக் குறைந்த வயதிலேயே சேர்க்கப்பட்டு விடுவர். கிட்டத்தட்ட பள்ளிகளில் தொடக்கல்வி முடிந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வயதில் அதை தவிர்த்து விட்டுத்தான் அவர்கள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவர்.
பதின்ம வயதுக்கு முன்னரே அவ்வாறு பாடசாலைகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இயற்கையாகவே வெட்கம், பயம் போன்றவை இருக்கும். கூடுதலாக அவர்களுக்கு வழங்கப்படும் ஒழுக்கம் சம்பந்தமான பயிற்சிகள் காரணமாக பதின்ம வயதை கடந்தாலும் கூட, அவர்களுக்கு உளவியல் ரீதியாக வெட்கமும் பயமும் வாழ்நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது தான், இது போன்ற செயல்களின் பக்கம் அவர்கள் செல்லாமல் தடுக்கும் தற்காப்பு ஆயுதம்.
அதை, அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் பயிற்சிப்பள்ளிகளில் பயின்றவர்கள், பயில்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. காவி வேட்டி, துண்டு, குடுமி, விபூதி, திருமண் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம் போன்ற புற அழகுகள் எல்லாம், யார் அர்ச்சகர் வேடம் தரித்தாலும் ஒன்று போலத்தான் இருக்கும்.
இவ்வாறு கூறினர்.