சிறுவர்களிடம் இலக்கிய படைப்பாற்றலை உருவாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
சிறுவர்களிடம் இலக்கிய படைப்பாற்றலை உருவாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
UPDATED : மே 16, 2024 12:00 AM
ADDED : மே 16, 2024 10:41 AM

நாமக்கல்:
நாமக்கல்லில், சிறுவர்களிடையே இலக்கிய படைப்பாற்றலை உருவாக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது. மே, 15, 16 என, இரண்டு நாட்கள் நடக்கிறது.
இரண்டு வயது முதல், 7 வயது வரையிலான சிறுவர்களுக்கு, குழந்தை இலக்கியம், 8 வயது முதல், 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு சிறார் இலக்கியம் என்றழைக்கப்படுகிறது.
இந்த இரு இலக்கியங்களும் அறிவுரை கூறுதல், கருத்துக்களை அறிமுகம் செய்தல், சொற்களை அறிமுகப்படுத்துதல், பாடல் மற்றும் கதைகளை உள்ளடக்கியதாகும். 3 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அதிக நேரம் பள்ளிகளிலேயே செலவழிக்கின்றனர்.
குழந்தை இலக்கியம், சிறார் இலக்கியங்களை படைப்பதற்கான சூழல், அதிகளவில் ஆசிரியர்களுக்கே உள்ளதால், சிறார் இலக்கிய முகாமானது தொடங்கப்பட்டுள்ளது. விழாவில், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். அவர், குழந்தை இலக்கியம், சிறார் இலக்கியத்தோடு, வகுப்பறை இலக்கியம் என்ற புதிய துறையை உருவாக்க ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி மிகப்பெரிய உதவியாக அமையும் என்றார்.
எழுத்தாளர் பெருமாள் முருகன், சிறார் இலக்கியம் உருவாகும் விதம் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில், துணை முதல்வர் அமீருன்னிசா, விரிவுரையாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தேவராசு, சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன ஆசிரியர் பாலசரவணன், முதுகலை ஆசிரியர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.