UPDATED : ஜூன் 25, 2026 09:40 PM
ADDED : ஜூன் 25, 2026 09:41 PM
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் அருகே ஜே.ஜே.நகர் பகுதி அரசு ஊராட்சி நடுநிலை பள்ளி மாணவர்களை, பள்ளி சீருடையிலேயே, முதல்வர் விஜய் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து செல்லும் தைரியமும், துணிச்சலும், த.வெ.க., நிர்வாகிகளுக்கு எப்படி வந்தது.
முதல்வர் பிறந்த நாள் எனக் கூறி, மாணவர்களை த.வெ.க., கொடிகள் கட்ட வைப்பது, அரசு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து பாட வைப்பது, மாணவர்களை, 'விஜய் வாழ்க' என கோஷமிட வைப்பது என சிறு பிள்ளைகளை, பணியாட்கள் போல் நடத்த, த.வெ.க.,வினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
தேர்தலின் போது, சட்டத்திற்கு புறம்பாக, சிறு குழந்தைகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி, அரியணையில் அமர்ந்த விஜய், தற்போது அதே குழந்தைகளை பணியாட்கள் போல் பயன்படுத்துவதை, தமிழக பா.ஜ., ஒரு போதும் அனுமதிக்காது.
மாணவர்களை பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து சென்றவர்கள் மீது, முதல்வர் விஜய் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இது போன்ற அராஜகங்களில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
