கானகத்தின் வழியே கல்விச்சாலைக்கு செல்லும் பழங்குடி குழந்தைகள்
கானகத்தின் வழியே கல்விச்சாலைக்கு செல்லும் பழங்குடி குழந்தைகள்
UPDATED : ஆக 28, 2024 12:00 AM
ADDED : ஆக 28, 2024 09:11 AM

பந்தலூர்:
நீலகிரி மாவட்டம் வனம் மற்றும் அதனை சார்ந்த கிராமங்கள், தேயிலை தோட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளது. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு, சாலை வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமங்களாகவே இன்றும் உள்ளது.
அதுமட்டுமின்றி வனப் பகுதிகளைக் கடந்து, கிராமங்களுக்கு செல்லும் சூழலில் வனப்பகுதிகள் வழியாக ஒற்றியடி நடைபாதைகளையே, மக்கள் தங்கள் வழித்தடங்களாக இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கிராமத்து குழந்தைகள் பள்ளி செல்வது தடைப்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில், வனப்பகுதிகள் மற்றும் வாகன வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்து, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வர வழி துணையாளர்கள் மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.இதில் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் உள்ள மண்ணின் மைந்தர்களான, பழங்குடியின மாணவர்களை முழு எழுத்தறிவு பெற்ற தலைமுறையினராக மாற்றும் செயலில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது வரவேற்பை பெற்று உள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பாலாபள்ளி மற்றும் கரும்பன்மூலா ஆகிய கிராமங்களில் இருந்து, மக்கள் வெளியில் வந்து செல்ல சாலை வசதி இருந்த போதும் வாகனங்கள் ஏதும் இந்த பகுதிகளுக்கு சென்று வருவதில்லை. சாலையை ஒட்டி முதுமலை வனம் அமைந்துள்ளதால், எந்த நேரத்திலும் புலி, கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும். இதனால் பகல் நேரங்களிலேயே, மக்கள் வெளியில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.
இதனால் இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்வதற்காக, வாகன வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. காலையில் வாகனங்களில் பயணிக்கும் மகிழ்ச்சியில், பழங்குடியின மாணவர்கள் எழுந்து குளித்து., சீருடை அணிந்து தங்களுக்காக வரும் பள்ளி வாகனத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பழங்குடியின பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை வாகனங்களில், பள்ளிக்கு அனுப்பி வைப்பதால் எந்த அச்சமும் இன்றி தங்கள் பணியை பார்க்கின்றனர். இதே போல் புலிகள் காப்பகத்தின் உள் பகுதியில் உள்ள, பெண்ணை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்கள் சுமார் 2- கிலோ மீட்டர் தூரம், ஒற்றியடை நடைபாதை வழியாகவே நடந்து வரவேண்டும்.
இந்தப் பகுதியில் எந்த நேரத்திலும் வனவிலங்குகள் வந்து செல்லும் நிலையில், பெரியவர்கள் நடந்து வருவதே சிக்கலான விஷயமாகும். இங்குள்ள பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்கள், வனப் பகுதியில் வழியாக நடந்து வருவது என்பது இயலாத காரியம்.இதனை தவிர்க்கும் விதமாக இந்த கிராமத்தில் இருந்து வழித்துணையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பள்ளி செல்லும் மாணவர்களை காலையில் அழைத்து வந்து மாலையில் வீடுகளுக்கு கொண்டு போய் விடுகின்றனர். வரும் வழியில் வனவிலங்கு ஏதும் உள்ளதா, என்பதை கண்காணித்து வனத்துறை பணியாளர்களிடம் விபரம் கேட்டு, வனவிலங்குகள் ஏதும் நடைபாதையை ஒட்டி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர்., பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து வருவது., மற்றும் மாலையில் வீடுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அவ்வப்போது பென்னை அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன், கிராமங்களுக்கு சென்று பழங்குடியின பெற்றோர்களை சந்தித்து, கல்வி தடைபடாமல் இருக்க அறிவுரை கூறி, அவ்வப்போது மாணவர்களை வீடுகளுக்கே நேரில் சென்று வழித் துணையாருடன் இவரும் அழைத்து வருகிறார். இதனால் வனப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காமல், தினசரி பள்ளிக்கு வருவதால் இவர்களின் எதிர்காலம் வளம் உள்ளதாக மாறும் சூழலில் உள்ளது.
கானகத்தின் வழியே புலியின் உறுமல், யானையின் பிளீரல் என வன விலங்குகளின் சத்தத்தை மட்டுமே கேட்ட பழங்குடியின குழந்தைகள், தற்போது பள்ளிக்கூடம் வந்து பாடங்களை படிப்பது கல்வித் துறையின் வளர்ச்சியில் முத்தாய்ப்பாக அமைந்து உள்ளது.இதில் கூடலூர் கல்வி மாவட்டத்தில் 3292 மாணவர்களும், ஊட்டி கல்வி மாவட்டத்தில் 1087 மாணவர்களும், குன்னூர் கல்வி மாவட்டத்தில் 673 மாணவர்களும், கோத்தகிரி கல்வி மாவட்டத்தில் 1098 மாணவர்கள் என மொத்தம் 6150 மாணவர்கள் பயன் பெற்று வருவதும் வரவேற்கக் கூடியதாக உள்ளது.
இதுபோல் அனைத்து கிராமங்களிலும் வழி துணையாளர்கள் மற்றும் வாகனங்களை அமர்த்தினால் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேலும் மேம்பட வழி ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.