ஐ.ஐ.டி., ஜோத்பூரில் பிஎச்.டி., படிக்கவுள்ள பழங்குடியின இளைஞர்
ஐ.ஐ.டி., ஜோத்பூரில் பிஎச்.டி., படிக்கவுள்ள பழங்குடியின இளைஞர்
UPDATED : டிச 26, 2024 12:00 AM
ADDED : டிச 26, 2024 07:50 PM
பாலக்காடு:
அட்டப்பாடியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர், ஐ.ஐ.டி., ஜோத்பூரில் பிஎச்.டி., படிக்கவுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி வனத்தினுள் உள்ள கறுகத்திக்கல்லு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த விவசாயியான லிங்கன்-நஞ்சனின் மகன் சுரேஷ் 26. இவர், நான்காம் வகுப்பு வரை குடியிருப்பு பகுதியோடு சேர்ந்துள்ள கொட்டியார்கண்டி அரசு பழங்குடியினர் பள்ளியில் படித்தார்.
தொடர்ந்து, கோழிக்கோடு அரசு மாதிரி குடியிருப்பு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த இவர், பாலக்காடு அரசு பண்டிட் மோதிலால் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்த பின், திருச்சூர் கேரளா வர்மா கல்லூரியில் தாவரவியலில் பட்டப்படிப்பும், காலடி சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பிஎச்.டி.க்கு ஐ.ஐ.டி., ஜோத்பூரில் அனுமதி கிடைத்தாலும் முதல் தவணை கட்டணம் மற்றும் பயண செலவுகளுக்கு பணவசதியின்றி சிரமப்பட்டார். இந்நிலையில், இவரின் பிரச்னைகளை அறிந்த, கேரள அரசின், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட அதிகாரிகளின் முயற்சியின் பலனாக, முதல் தவணை கட்டணமான, 65 ஆயிரம் ரூபாய் மற்றும் பயண செலவுக்கு, 25 ஆயிரம் ரூபாயை வழங்க பழங்குடியின நலத்துறை அனுமதித்தது.
இத்தொகை, நேற்று அவருக்கு வழங்கப்பட்டது. ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி., படிக்கும் அட்டப்பாடி சேர்ந்த முதல் பழங்குடியின இளைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.