தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே அறையில் இரு பள்ளி மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் அவதி: கல்வி துறை ஆக்கிரமித்துள்ளதால் தொடரும் அவலம்

ஒரே அறையில் இரு பள்ளி மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் அவதி: கல்வி துறை ஆக்கிரமித்துள்ளதால் தொடரும் அவலம்

ஒரே அறையில் இரு பள்ளி மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் அவதி: கல்வி துறை ஆக்கிரமித்துள்ளதால் தொடரும் அவலம்


UPDATED : அக் 31, 2026 02:15 PM

ADDED : அக் 31, 2026 02:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 02:15 PM ADDED : அக் 31, 2026 02:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் குப்புசாமி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 60 மாணவர்கள் படிப்பதால், ஒரே அறையில் இரு வேறு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால், பாடத்தை கவனிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கல்வி துறையினர் ஆக்கிரமித்துள்ள அறைகளை காலி செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.எம்., மேல்நிலைப்பள்ளி என, மூன்று பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் நீண்டகாலமாக இடநெருக்கடி பிரச்னை இருந்து வருகிறது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சீனிவாசன் மாநகராட்சி பள்ளிக்கு, பள்ளி வளாகங்களிலேயே கூடுதலாக எட்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், சீனிவாசன் மாநகராட்சி பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பழைய பள்ளி கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 60 மாணவர்கள், அருகில் உள்ள குப்புசாமி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குப்புசாமி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வெறும் ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஏற்கனவே அங்கு, 40 மாணவர்கள் படித்து வரும் நிலையில், சீனிவாசன் மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை அருகருகே அமர வைத்து பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சீனிவாசன் மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே அந்த பள்ளிக்கு சொந்தமான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அவற்றில் ஒரு பகுதியில் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அந்த நீதிமன்றம் விரைவில் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கு சொந்தமான மற்றொரு பகுதியில் உள்ள ஐந்து வகுப்பறைகளை கல்வித்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருவதாக, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த வகுப்பறைகளில் தேவையற்ற தளவாட பொருட்கள் மற்றும் பழைய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவை பயன்பாடின்றி பூட்டி கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அமர்ந்து படிப்பதால், பாடம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், கரும்பலகை, விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, கல்வித்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வரும் ஐந்து வகுப்பறைகளையும் உடனே காலி செய்து, சீனிவாசன் மாநகராட்சி பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலகம் ஆக்கிரமிப்பு

சீனிவாசன் மாநகராட்சி பள்ளியில் ஐந்து வகுப்பறை கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதை போலவே, ராணி அண்ணாதுரை பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகள், மாவட்ட கல்வி அலுவலகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

ராணி அண்ணாதுரை பள்ளிக்கு சொந்தமான வகுப்பறை கட்டடத்தை, மாவட்ட கல்வி அலுவலகமாக பல ஆண்டுகளாக கல்வித்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் காலி செய்ய பலமுறை அறிவுறுத்தியும், கல்வித்துறை அதிகாரிகள் காலி செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us